பொருள் கோள். செய்யுங் கடமைகளைச் செய்த சிறப்புப்பற்றித் தாய்தந்தை முதலியோரை அறிவுப் பொருளாகிய உயிரென்றும், செய்ந்நன்றியறிதல் முதலிய உயிர்க்குணம் இவனிடத்துத் தோன்றாமையாகிய இழிவுபற்றி இவனை உடம்பு என்றுங் கூறினமையால், அவ்விரண்டும் முறையே அவ்வுயர்வு இழிவுகளைப்பற்றி வந்த திணைவழுவமைதி, பொச்சாந்து : பொச்சா : பகுதி (91) 92. விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை யொன்றும் உணராத ஏழையும் - என்றும் இறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவா தவர். (இ-ள்.) விழுத்திணை - (அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய) சிறந்த குலத்தில், தோன்றாதவனும் - பிறவாதவனும்; எழுத்தினை - இலக்கண நூலை, ஒன்றும் உணராத - எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத, ஏழையும் - பேதையும்; என்றும் - எப்பொழுதும்; இறந்து - முறைதப்பி, உரை - சொற்களை, காமுறுவானும் - பேச விரும்புகின்றவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், பிறந்தும் - மக்கட் பிறப்பிற் பிறந்தும், பிறவாதவர் - (பிறப்பின் பயனையடையாமையால்) பிறவாதவராவார்; (எ-று.) (க-ரை.) நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர் என்பது. விழுத்திணை - விழுப்பமாகிய திணை : பண்புத்தொகை. எழுத்து - தன்னை யுணர்த்தும் இலக்கண நூலக் காதலால் காரியவாகுபெயர். ஒன்றும் : உம் முற்றுப் பொருளுடன் இழிவு சிறப்புப் பொருளிலும் வந்தது. (92) 93. இருளாய்க் கழியும் உலகமும் யாதும் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும் பேதைமை வாழும் உயிர்க்கு. (இ-ள்.) இருளாய் - (அறிவில்லாதவர்க்கிடமாய் அதனால்) இருட்டாய், கழியும் - நாள்கழிக்கின்ற, உலகமும் - இடமும், யாதும்,
|