(நன்மை தீமைகளில்) ஒன்றும், தெரியாது - தெரியாமல், உரைக்கும் - சொல்கின்ற, வெகுள்வும் - கோபமும்; பொருள் அல்ல - நற் பொருள் அல்லாதவற்றில், காதல் படுக்கும் - அன்புவைக்கச் செய்யும், விழைவும் - விருப்பமும், இவை மூன்றும் - ஆகிய இம் மூன்றும், வாழும் உயிர்க்கு - உடலோடு கூடி வாழ்கின்ற உயிர்கட்கு, பேதைமை - அறியாமையைத் தருவனவாம்; (எ-று.) (க-ரை.) அறிவில்லாதவர் இருக்கும் இடமும், நன்மை தீமை தெரியாது கோபித்துரைப்பதும், தீயவற்றில் செல்லும் விருப்பமும் மேன்மேலும் அறியாமைக்கு ஏதுவாகிய காரியங்களாம் என்பது. இருள் : அறியாமைக்கு உவமையாகுபெயர். இடத்தின் நிகழும் உயிர்களின் தன்மையை அவ்விடத்தின்மே லேற்றி இலக்கணையால் இருளாய்க் கழியும் உலகம் என்றார். அல்ல : பண்படியாகப் பிறந்த பெயர். (93) 94. நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியா தார். (இ-ள்.) நண்பு - நட்புக்குணம், இல்லார்மாட்டு - இல்லாதவரிடத்தும், நசைக்கிழமை - அன்புரிமையை, செய்வானும் - செய்கின்றவனும்; பெண்பாலை - மனைவியை, காப்பு - காப்பதை, இகழும் - இகழுகின்ற, பேதையும் - அறிவில்லாதவனும்; பண்பு இல் - குணமில்லாத இழுக்கு ஆன - வழுவுதலான, சொல் ஆடுவானும் - சொல்லைச் சொல்பவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், ஒழுக்கம் - தமக்குரிய ஒழுக்கத்தை, கடைப்பிடியாதார் - உறுதியாகக் கொள்ளாதவராவர்; (எ-று.) (க-ரை.) நண்பராகத் தகாதாரை நட்புச் செய்கின்றவனும் மனைவியைக் காவாதவனும், இழிமொழி பேசுகின்றவனும் நல்லொழுக்கமில்லாதவர் என்பது. மாட்டு : ஏழனுருபு. நசைக்கிழமையாவது, நண்பர்கட்குச் செய்யவேண்டிய கடமை. இழுக்கு : முதனிலைத் தொழிற்பெயர். (94)
|