பக்கம் எண் :

73

 95. அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின்
வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.

(இ-ள்.) அறிவு அழுங்க - நல்லறிவு கெடும்படி, தின்னும் - வருத்துகின்ற, பசிநோயும் - பசியாகிய நோயும், மாந்தர் - நல்லோர், செறிவு அழுங்க - நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் - உண்டாகும் விருப்பமும்; செறுநரின் - பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை - கொடிய மொழிகளை, நோனா - பொறுக்காத, வெகுள்வும் - கோபமும்; இவை மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், நல்வினை - நல்ல வினையை, நீக்கும் - நீக்குகின்ற, படை - படைக் கருவிகளாம்; (எ-று.)

(க-ரை.) கொடும் பசியாலும், பெருவிருப்பாலும், கொடுமொழி பொறுக்காத கோபத்தாலும் அறமுறை கெடும் என்பது.

செறிவு : தொழிற்பெயர். செறுநர் : வினையாலணையும் பெயர். நோனா - நோன் : பகுதி. வெவ்வுரை : வெம்மை + உரை. பசிநோய் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.

(95)

 96. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை.

(இ-ள்.) கொண்டான் - கொண்ட கணவனுடைய, குறிப்பு அறிவாள் - குறிப்பறிந்து நடக்கின்றவள், பெண்டாட்டி - மனைவியாவாள் : கொண்டன - தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை - செய்யும் முறைப்படி, செய்பவன் - செய்பவன், தவசி - தவசியாவன்; கொடிது - தீங்கினை, ஒரீஇ - நீக்கி, நல்லவை - (குடிகளுக்கு) நன்மையானவற்றை, செய்வான் - செய்பவன், அரசன் - அரசனாவான்; இவர் மூவர் - ஆகிய இவர் மூவரும், பெய் என - (மழையைப்) பெய் என்றுசொல்ல, மழைபெய்யும் - மழை பொழியும்; (எ-று.)

(க-ரை.) குறிப்பறிந்து நடக்கும் பெண்டாட்டியும் நோன்புகளை முறைப்படி நடத்துகிற தவசியும், குடிகளுக்குத்