பக்கம் எண் :

75

வாழ்தலும் - மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் - கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன், முறை நெறியில் - முறையாக ஆளும் வழியில்; சேர்தலும் - சேர்ந்து நடத்தலும்; பெண்பால் - பெண்ணுக்கு உரிய குணம் அமைந்தவள், கொழுநன்வழி - தன் கணவனுடைய குறிப்பின் வழியில், செலவும் - நடத்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், திங்கள் - மாதந்தோறும் பெய்யவேண்டிய, மும்மாரிக்கு - மூன்று மழைக்கும், வித்து - காரணங்களாம்; (எ-று.)

(க-ரை.) அந்தணர் மறைவழி நடத்தலாலும், அரசன் செங்கோல் நெறி பிறழாததாலும், மனைவி கணவனுக்கு இசைந்து நடப்பதாலும் திங்கள் மும்மாரி பொழிந்து நாடு செழிக்கும் என்பது.

தீக்களில் வேள்வித்தீ சிறந்வதாதலால் வேள்வித்தீயைச் செந்நீ என்றார். செலவு : தொழிற்பெயர், முறை : தானியாகுபெயர்.

(98)

 99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை - கற்றறிவுடையாரை, கைவிட்டு - முற்றும் விட்டு நீக்கி, வாழ்தலும் - வாழ்பவனும்; காமுற்ற - தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு - விரும்பினாற்போல, செய்து ஒழுகும் - செய்து நடக்கும், பேதையும் - அறிவில்லாதவனும்; முட்டு இன்றி - தடையில்லாமல், அல்லவை செய்யும் - தீங்குகளைச் செய்யும், அலவலையும் - பேச்சுக்காரனும்; இ மூவர்- ஆகிய இம் மூவரும்; நல் உலகம் - நல்ல உலகங்களை, சேராதவர் - சேராதவராவார், (எ-று.)

(க-ரை.) கற்றவரைக் கைவிட்டிருப்பதும், வேண்டியவற்றை ஆராயாமல் செய்யத் துணிதலும், தீங்குகளைச் செய்து அவற்றைப் பற்றிப் பேசுதலும் நல்ல உலகம் சேரக் காரணமாக மாட்டா என்பது.