வெல்லும் போரிடத்தே, வேந்து - தம் வேந்தன், உவப்ப - மகிழ, அட்டு - பகைவரைக் கொன்று, ஆர்த்த - நிறைத்த, வென்றியும் - வெற்றியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தாம் - தாமே, தம்மை - தம்மைக் குறித்து, கூறா - புகழ்ந்துபேச வேண்டாத, பொருள் - பொருள்களாம்; (எ-று.) (க-ரை.) பேர்பெற்ற குடிப்பிறப்பு, சிறந்த கல்வி, வெற்றி மிகுந்த வீரம் இவைதாமே பிறர்க்கு விளங்குவன; இவற்றையுடையவர் தாமே எடுத்துயர்த்தல் பேதைமையுடைத்து; ஆதலால் எடுத்துரைத்த லாகாது. தொல்லவை - தொன்மை + அவை, தொன்மை - பழைமை, பண்புப் பெயர், நல்லவை - நன்மை+அவை, குடிமை; குடி+குலம் : இஃது ஆகுபெயராய் அதிற் பிறப்பைக் குறிக்கும். தொக்கு - தொகு என்ற பகுதி இரட்டித்து இறந்தகாலங் காட்டியது : வினையெச்சம். மேம்பட்ட - மேன்மைப்பட்ட; படுதல் - உண்டாதல், வேந்து - வேந்தன் தன்மை, வேந்தனுக்கு ஆகுபெயர்; கூற்று. அரசு முதலியவை போல, உவப்ப, அட்டு என்னும் வினையெச்சங்கட்கு முறையே உவ, அடு என்பன முதனிலைகள், ஆர்த்த - முழங்குதலுமாம். வென்றி : தொழிற்பெயர். சமம் - போர், இருவர் எதிர்த்து நிற்றல் என்பது. (8) 9. பெருமை யுடையா ரினத்தின் அகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. (இ-ள்.) பெருமை - பெருந்தன்மை, உடையார் - உடையவருடைய, இனத்தின் - இனத்தினின்றும், அகறல் - நீங்குதலும், உரிமைஇல் - தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை - மாதரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல - சிறந்தவை அல்லாதவற்றை, துணிதல் - சிறந்தவையாகத் துணிதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், முழுமக்கள் - மூடர், காதலவை - விரும்புபவையாம்; (எ-று.) (க-ரை.) நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும், அறிவற்ற மூடர்கள் செயல்களாம்.
|