இரவில் வெளி விடுவனவாதலின் இரா மரம் சேரார் என்றார். எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாகாத நாட்களில் எண்ணெய் தேய்க்க நேரின் கஞ்சியேனும் நெய்யேனும் நீரேனும் கலந்து விட்டால் குற்றமில்லை யென்னு முறைபற்றி நீர் தொடா தெண்ணெயுரையார் என்றார். தொடார் : முற்றெச்சம். (13) நீராட்டியல்புநீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும் நீந்தா ருமியார் திளையார் விளையாடார் காய்ந்த தெனினுந் தலையொழிந் தாடாரே ஆய்ந்த அறிவி னவர். (இ-ள்.) நெறிப்பட்டார் - ஒருமுறைப்பட்டார்; நீராடும் போழ்தில் - நீராடும் பொழுதில், எ ஞான்றும் - ஒரு நாளும். நீந்தார் - நீந்தமாட்டார், உமியார் - எச்சிலை யுமிழமாட்டார், திளையார் - அமுங்கி யிருக்கமாட்டார், விளையாடார் - விளையாடுதலுஞ் செய்யார்; ஆய்ந்த அறிவினவர் - ஆராய்ந்த அறிவுடையவர், காய்ந்தது எனினும் - எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் தலை காய்ந்திருந்தாலும், தலை ஒழிந்து - தலை ஓழிய, ஆடார் - கழுத்தளவாய் அமிழ்ந்து குளியார் (ப. பொ-ரை.) ஒரு முறைப்பட்டார் நீராடும் போழ்தின் கண் ஒருநாளும் நீந்தார். நீரின்கண் உமியார், நீரைக் குடைந்து திளையார், விளையாடுவதுஞ் செய்யார். எண்ணெய் பெறாது தலை காயந்ததெனினும் தலையொழிய நீராடார் ஆய்ந்த அறிவினார். (க-ரை.) குள முதலியவற்றில் நீராடுங்காலத்து நீந்துதல் எச்சிலுமிழ்தல் முதலிய அருவருக்கத்தக்க செயல்களைச் செய்யலாகாது. கழுத்துவரை குளிக்கலாகாது. நெறிப்பட்டார் - நூல்வழி யொழுகுபவர்; நல்லொழுக்க முடையார். திளைத்தல் - அமுங்குதல். நீராடல் - முழுகுதல். போழ்து - பொழுது என்பதன் மரூஉ. உமியார்; உமி : பகுதி; இது உமிழ் என்றும் வரும். (14) தன்னுடல்போற் போற்றத்தக்கவைஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் நாயிறு தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண் ஐம்பூத மன்றே கெடும்.
|