(இ-ள்.) ஐம்பூதம் - நிலம் முதலான ஐம்பூதங்களையும், பார்ப்பார் - பார்ப்பாரையும், பசு - பசுவையும், திங்கள் நாயிறு - சந்திரனையும் சூரியனையும், தம்பூதம் எண்ணாது - தம் உடம்பு போலக் கருதிப்போற்றாது, இகழ்வானேல் - இகழ்வானயின், தன் மெய்க்கண் - தன் உடம்பின்கண் உள்ள, ஐம்பூதம் - ஐந்து பூதத்தையுடைய தெய்வங்கள், அன்றே கெடும் - அன்றே கெட்டகன்றுபோம். (ப. பொ-ரை.) நிலம் முதலாயின ஐம்பூதங்களையும் பார்ப்பாரையும் பசுக்களையும் திங்களையும் ஞாயிற்றையும் தன் உடம்பு போலக் கருதிப் போற்றா திகழ்வானாயின் தன் உடம்பின்கண் உள்ள ஐந்து பூதத்தையு முடைய தெய்வங்கள் அன்றே கெட்டகன்றுபோம். (க-ரை.) பஞ்ச பூதம் முதலியவைகளை இகழ்வானாயின் ஒருவன் உடம்பின்கணுள்ள ஐந்துபூதத்தையுடைய தெய்வங்கள் அன்றே நீங்கும். தன்பூதம் என்பது எதுகை நோக்கித் தம்பூதம் என வந்தது. பூதம் கருவியாகு பெயராய் அவற்றாலாகிய உடம்பை யுணர்த்திற்று. தம்பூதம் என்னாது என்றும் பாடம். மெய்க்கண் ஐம்பூதம் என்பதற்கு உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் எனவுங் கூறலாம். ஐம்பூதங்களாவன : மண், நீர், அனல், வளி, வான், அன்று, ஏ, என்பன முறையே விரைவும் துணிவுங் குறித்தன. (15) ஐம்பெருங்குரவர் வழிபாடுஅரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன் நிகரில் குரவர் இவரிவரைத் தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே யாவருங் கண்ட நெறி. (இ-ள்.) அரசன் - அரசனும், உவாத்தியான் - உவாத்தியும், தாய் தந்தை - தாயும் தந்தையும், தம்முன் - தனக்கு மூத்தோனும், இவர் - என இவர்கள், நிகர் இல் குரவர் - தமக்கு நிகரில்லாக் குரவராவார், இவரை - இவர்களை, தேவரைப் போலத் தொழுது எழுக - தேவரைப்போலத் தொழுது எழுக, என்பது - என்று சொல்லப்படுவது, யாவரும் - எல்லாரும், கண்ட - வரையறுத்துக் கூறிய, நெறி - வழி. (ப. பொ-ரை.) அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவர்.
|