பக்கம் எண் :

17

இவர்களைத் தேவரைப்போலத் தொழுதெழுக என்று சொல்லப்படுவது எல்லா நல்லாரும் உரைத்துச் சொல்லிய நெறி.

(க-ரை.) அரசன் முதலிய ஐங்குரவரையும் தேவரைப் போலத் தொழுது எழுக.

தம்முன் - தனக்கு முன்னே பிறந்தவன். முன் : காலவாகுபெயர். குரவர் - பெரியோர். இச்செய்யுளில் இரண்டாமடி ஒரு சீர் குறைந்து வந்தமையால் சவலை வெண்பா.

(16)

நல்லறிவாளர் செயல்

குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
1 மேல்கோலும் தின்னார் மரங்குறையா வென்பவே
நல்லறி வாளர் துணிவு.

2(இ-ள்.) குரவர் உரை - முன்பு கூறப்பட்ட குரவர்கள் சொல்லிய சொல்லை, இகந்து - கடந்து, செய்யார் - ஒன்றனையுஞ் செய்யார், குறை விரதம் உடையார் - முடியாத குறை விரதமுடையார், தீர - மிக, மறவார் - அதனை மறந்து ஒழுகார், நிறை உவாமேல் - மதிநிறைந்த உவாவின்கண், கோலும் தின்னார் - பல் துடைப்பதும் செய்யார், மரம் குறையார் - அவ்வுவாவின் கண் மரங்களையும் வெட்டார், என்பது - என்று சொல்லப்படுவது, நல் அறிவாளர் -நல்லறிவாளர், துணிவு - தொழில். ஏ : அசை.


1. ‘மேல் கோலும்' என்பது வேல்கோலும் எனவும் ‘மரங்குறையார்' என்பது மறைகுறையா எனவும்இருத்தல் வேண்டும்.

2. நோன்பே எனினும் ஐம்பெருங் குரவர்களாகிய தாய் தந்தை முதலியவர்களின் சொல்லைக் கடந்து செய்யார்; யாதேனும் ஒரு குறையினை உடையார் அது நீங்குமளவும் இடைவிடாது முயன்று அக்குறையை நீக்கிக் கொள்வார்; நிறைமதி நாளில் பல் தேய்ப்பதற்குக்கூட மரத்திலிருந்து குச்சியை ஒடியார். இவை பேரறிவாளர்களின் செயல்களே ஆகும் என்பர் மேலோர். ‘என்பவே' - ஏகாரம் பிரித்துத் துணிவு என்பதனோடு கூட்டிப் பொருள் கூறப்பட்டுளது. நிறைமதி நாளில் மரம், செடி, கொடி முதலிய உயிர்களுக்குக் கூட ஊறு செய்யலாகாது என்பது குறிப்பு.