மறையால் நீர்வலஞ்செய் தடிசில் தொட்டு" என்பது காசி கண்டம். பூசல் - துடைத்தல். எடுத்துக்கொண்டார் என இறந்த காலத்தாற் கூறியது துணிவுபற்றி : காலவழுவமைதி. குறித்து - நீராடுதல் முதலியன செய்யாமையைக் கருதி. (18) கால் கழுவியபின் செய்யவேண்டியவை காலினீர் நீங்காமை யுண்டிடுக பள்ளியுள் ஈரம் புலராமை யேறற்க வென்பதே பேரறி வாளர் துணிவு. (இ-ள்.) காலின் நீர் - கால்கழுவின நீரின், நீங்காமை - ஈரம் புலர்வதற்கு முன்னே, உண்டிடுக - உண்ணத் தொடங்குக, பள்ளியுள் - படுக்கையில், ஈரம் - கால் கழுவின ஈரமானது, புலராமை - காய்வதற்கு முன்னே, ஏறற்க - ஏறாதொழிக, என்பது - என்று சொல்லப்படுவது, பேர் - பெரிய, அறிவாளர் - அறிவுடையவரது, துணிவு - கொள்கையாம். (ப. பொ-ரை.) கால் கழுவி நீர் உலர்வதற்கு முன்னே உண்ணத் தொடங்குக, பாயலின் கண் கால் கழுவிய ஈரம் புலர்ந்தாலன்றி ஏறாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு. (க-ரை.) கால் கழுவின ஈரங் காய்வதன் முன் உணவு கொள்க, கால் கழுவின ஈரங் காய்ந்தபின்னே பள்ளி ஏறுக.
புலராமை, நீங்காமை : எதிர்மறை வினையெச்சங்கள். உண்டிடுக : உடன்பாட்டு வியங்கோள், ஏறற்க : எதிர்மறை வியங்கோள். பள்ளி - படுக்குமிடம். (19) உண்ணும் முறைமைஉண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் கண்ணமர்ந்து தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும் பிறிதியாது நோக்கா னுரையான் தொழுதுகொண் டுண்க உகாஅமை நன்கு. (இ-ள்.) உண்ணுங்கால் - ஒருவன் உண்ணும்பொழுது, நோக்கும் திசை - தான் பார்க்கப்படும் திசையானது, கிழக்குக் கண் - கிழக்கு முகமாக, அமர்ந்து - பொருந்தி, தூங்கான் - தூங்காமல், துளங்காமை - அசைந்தாடாமல், நன்கு - நன்றாக, இரீஇ -
|