பக்கம் எண் :

20

இருந்து, யாண்டும் - எவ்விடத்தும், பிறிதுயாது - வேறொன்றனையும், நோக்கான் - பார்க்காமல், உரையான் - பேசாமல், தொழுது - உண்கின்ற உணவைத் தொழுது, கொண்டு கையாலெடுத்து, உகாமை - சிந்தாமல், நன்கு - நன்றாக, உண்க - உண்பானாக.

(ப. பொ-ரை.) உண்ணும்போது நோக்கப்படும் திசை கீழ்த்திசையாகக் கண் பொருந்தி, தூங்காது புடைபெயராது நன்றாக இருந்து, எவ்விடத்தும் பிறிதொன்றினையும் நினையாது, நோக்காது, சொல்லாது, உண்கின்ற உணவினைத் தொழுது சிந்தாமல் உண்க.

(க-ரை.) உணவுட்கொள்வோன் கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கருத்துடையனா யுண்க. கிழக்கு மங்கலத் திசையாதலின் கிழக்கு நோக்கி எனப்பட்டது.

"நித்திரை அசனம் எண்ணெய் நிரைமயிர் சிரைத்த லின்ன
உத்தமக் கிழக்கு நன்றாம் ஓங்குயிர் வளருந் தெற்கு
சித்தமே கலங்கு மேற்குத் திசைகேடு நான்கு மூலை
அத்தமும் உயிரும் போக்கும் ஆனதோர் வடக்குத் தானே"

என்ற நீதிசாரச் செய்யுள் ஈண்டுக் கருதற்பாலது. மனக்கவலையாற் பிறிதொன்றினை நினைப்பின் உணவின் சுவைப்பயன் அறியப்படாதாதலின், நினையாது என்பது பொழிப்புரையிற் சேர்க்கப்பட்டது. உண்கின்ற உணவு அன்ன லட்சுமியென வழங்கப்படும். இனித் தொழுது என்பதற்குக் கடவுளைத் தொழுது எனலுமாம். உண்ணுங்கால் - உண்ணும்பொழுது எனின், பெயரெச்சத்தொடர். கால் - காலம் என்பதன்குறைவு. தூங்கான் நோக்கான் உரையான் : முற்றெச்சங்கள். இரீஇ : சொல்லிசை யளபெடை. நன்கு : பண்புப்பெயர். பிறிதியாது என்பதில் இகரம் குற்றியலிகரம். உகாஅமை : செய்யுளிசையளபெடை. "தொழுதுகொண் டுகாஅமை நன்கு" என்பது சீவகசிந்தாமணி முத்தியிலம்பகம் 101 ஆம் செய்யுளுரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

(20)

உணவு கொடுத்துண்டல்

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.