(இ-ள்.) விருந்தினர் - விருந்தினரும், மூத்தோர் - மிகமுதியரும், பசு - பசுக்களும், சிறை - பறவைகளும், பிள்ளை - பிள்ளைகளும், இவர்க்கு - என்று சொல்லப்பட்ட இவர்கட்கு, ஊண் கொடுத்து அல்லால் - உணவு கொடுத்தல்லாமல், உண்ணார் - உண்ணமாட்டார், என்றும் - எக்காலத்திலும், ஒழுக்கம் - நல்லொழுக்கத்தினின்றும், பிழையாதவர் - தவறாத பெரியோர்கள். (ப. பொ-ரை.) விருந்தினரும் மிக மூத்தோரும் பசுக்களும் சிறைகளும் பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவர்கட்கு உணவு கொடுத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் பிழையாதார். (க-ரை.) விருந்தினர் முதலியவர்கட்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது. விருந்தினர் - புதியவர்; விருந்து - புதுமை; இது ஆகுபெயராய்ப் புதியராய் வந்தார்மேனின்றது. அவர் இரு வகையார், பண்டறிவுண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தாரும் என. சிறை - சிறகுகளையுடையது; பறவை : சினையாகு பெயர். மூத்தோர், மூ : பகுதி; உயாதிணையோடு அஃறிணை கலந்து மிகுதியால் உயர்திணை முடிபேற்ற வழுவமைதி. (21) உண்ணுந் திசைஒழிந்த திசையும் வழிமுறையா னல்ல முகட்டு வழியூண் புகழ்ந்தா ரிகழ்ந்தார் முகட்டு வழிகட்டிற் பாடு. (இ-ள்.) ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல - முன் சொன்ன கிழக்குத்திசைக்கு இடையூறுளதாயின் மற்றைத் திசைகளும் நல்லவாம்; முகட்டுவழி ஊண் - உச்சிப்பொழுதில் உண்ணுதலை. புகழ்ந்தார் - ஆமெனப் புகழ்ந்தார்கள், முகட்டு வழி - வாயிற்படிக்கு நேராக; கட்டில் பாடு - கட்டிலிட்டுப் படுத்தல், இகழ்ந்தார் - ஆகாதென்று பழித்தார் நல்லவர். (ப. பொ-ரை.) முன் சொன்ன கீழைத்திசையும், அக்கீழைத்திசைக்கு இடையூறு உளதாயின் பின்னை நோக்கி யுண்டற்கு மற்றைத்திசைகளும் நல்லவாம். உச்சிப்பொழு துண்டலை ஆமெனப் புகழ்ந்தார்கள். முகட்டினேர் கட்டிலிட்டுக் கிடக்கலாகாதென்று பழித்தார்கள் நல்லோர்.
|