(க-ரை.) கிழக்கு நோக்கி யிருந்துண்ண இயலாதாயின் வேறுதிசை நோக்கியிருந்து முண்ணலாம். வாயிற்படிக்கு நேர் கட்டிலிட்டுப் படுக்கலாகாது. ஊண் : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; உண் : பகுதி - பாடு என்பதும் அது; படு : பகுதி. முகடு என்பதற்கு வீட்டின் உத்திரம் எனக்கொண்டு முகட்டுவழி கட்டிற்பாடு என்பதற்கு அவ்வுத்திரத்தின் நேராகக் கீழே படுத்தல் என்பதுமாம். உத்திரத்தின் கீழ்ப்படுத்தல் தீக்கனாவுக்கேது. (22) நின்றுகிடந் துண்ணாமைகிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையு முண்ணார் சிறந்து மிகவுண்ணார் கட்டின்மே லுண்ணார் இறந்தொன்றுந் தின்னற்க நின்று. (இ-ள்.) கிடந்து உண்ணார் - கிடந்துண்ணல் ஆகாது. நின்று உண்ணார் - நின்றுண்ணலாகாது, வெள்ளிடையும் உண்ணார் - வெள்ளிடையின்கண் இருந்தும் உண்ணல் ஆகாது. சிறந்து - விரும்பி, மிக உண்ணார் - மிக உண்ணணலும் ஆகாது, கட்டில்மேல் உண்ணார் - கட்டில்மேலிருந்து உண்ணல் ஆகாது. இறந்து - நெறியைக் கடந்து, ஒன்றும் - யாதொன்றும், நின்று - நின்றுகொண்டு, தின்னற்க - தின்னலும் ஆகாது. (ப. பொ-ரை.) கிடந்துண்ணல் ஆகாது, நின்றுண்ணல் ஆகாது, வெள்ளிடையின் கண்ணிருந்து உண்ணல் ஆகாது, விரும்பி மிகவும் உண்ணல் ஆகாது, நெறியைக் கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு தின்னலும் ஆகாது. (க-ரை.) படுத்தோ நின்றோ வெளியிடையிலிருந்தோ உண்ணலாகாது, கட்டின்மேலிருந்துந் தின்னலாகாது. இனிச், ‘சிறந்த' என்ற பாடங்கொள்ளின் சிறந்த உணவுகளை என்க. தின்னல் என்னும் வினை உபலட்சணத்தால் பருகுதல் நக்கல் முதலிய தன்னினத்தையுங் குறிக்கும். (23) பெரியோர்பா லிருந்தருந்துவதுமுன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண் என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற் பெரியார்தம் பாலிருந்தக் கால்.
|