(இ-ள்.) தம்மின் பெரியார் - தம்மிலும் பெரியராயுள்ளவர். தம்பால் - தம் பந்தியில், இருந்தக்கால் - இருந்து உண்ணுமிடத்து, முன் துவ்வார் - அப்பெரியவர் உண்பதற்கு முன்னே தாம் உண்ணார், முன்எழார் - முந்தி எழுந்திரார், மிக்கு உறார் - அவர்களை நெருங்கியிரார், ஊணின்கண் - உண்ணுமிடத்து, ஆற்ற - மிகுதியாக, என்பெறினும் - எல்லாச் செல்வமும் பெறுவதா யிருப்பினும், வலம் இரார் - வலப்புறம் இருந்து உண்ணார். (ப. பொ-ரை.) தம்மிற் பெரியார் தம் பந்தியிலிருந்து, உண்ணுமிடத்து அப்பெரியார் உண்பதற்கு முன்னே தாம் உண்ணார், முந்துற எழுந்திரார், அவர்களை நெருங்கியிரார், உண்ணுமிடத்து மிக எல்லாச் செல்லமும் பெறுவதா யிருப்பினும் வலமிருந்து உண்ணற்க. (க-ரை.) பெரியோர்களுட னிருந்துண்ணுங் காலத்து அவர்கட்கு முன் உண்ணலும் எழுதலும் முதலியன ஆகா. மிக்குறார் என்பது ‘மீக்கூறார் எனச் சொற்சிதைவாக்கி அதிகம் பேசார்' என்பதுமாம். ‘பெரியோர் நிரலிருந்தக்கால்' என்ற பாடங்கொள்ளின், நிரல் என்பதற்கு வரிசை என்க. துவ்வார்; து : பகுதி. ஊணின்கண் என்பதற்கு உண்ணும் பொருள்களில் எனலுமாம். (24) சுவைப்பொருள் நுகர்முறைகைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப மெச்சும் வகையா லொழிந்த விடையாகத் துய்க்க முறைவகையா லூண். (இ-ள்.) கைப்பன எல்லாம் - கைக்குங் கறியெல்லாம் : கடை (ஆக) - கடையாகவும், தித்திப்ப (எல்லாம்) - தித்திக்கும் கறியெல்லாம், தலை (ஆக) - முதலாகவும், ஒழிந்த (எல்லாம்) - ஒழிந்த சுவைகளுள்ள கறிகளெல்லாம், இடையா - இடையாகவும், முறை வகையால் - முறைப்படி, மெச்சும் வகையால் - புகழும் வகையான், ஊண் துய்க்க - உணவை யருந்துக. (ப. பொ-ரை.) கைக்குங் கறியெல்லாம் முடிவின்கண்ணாகவும், தித்திக்குங் கறியெல்லாம் முதலாகவும், ஒழிந்த சுவைகளுள்ள கறிகளெல்லாம் இடையாகவும் உண்க; புகழும் வகையான்.
|