விதிப்படி எவ்வுயிர் என்றாயிற்று, ஒப்புரவு - பெரியோரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஞானம்; ஒப்பு + உரவு : அஃதாவது உலக நடை. நட்டல் நள் என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர். இச்செய்யுள் 'பாதம் பலவரிற் பஃறொடை வெண்பா' என்பதற்கிணங்க நான்கடியின் மிக்குவந்தது. (1) ஒழுக்கம் பிழையாதவ ரடையும் உறுதிபிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை இலக்கணத்தா லிவ்வெட்டு மெய்துப என்றும் ஒழுக்கம் பிழையா தவர். (இ-ள்.) என்றும் - எப்பொழுதும், ஒழுக்கம் பிழையாதவர் - ஒழுக்கத்தில் தவறாதவர், பிறப்பு - நற்குடிப்பிறப்பு, நெடு வாழ்க்கை - நீண்ட வாழ்நாள், செல்வம் - பொருட் செல்வம், வனப்பு - அழகுடைமை, நிலக்கிழமை - நிலத்திற்கு உரிமை, மீக்கூற்றம் - சொல்லின் மேன்மை, கல்வி - படிப்பு, நோய் இன்மை - பிணியில்லாமை, இ எட்டும் - இந்த எட்டு வகையினையும், இலக்கணத்தால் - அவற்றிற்குரிய இலக்கணங்களுடன், எய்துப - அடைவர். (ப.பொ-ரை.) நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார். (க-ரை.) ஒழுக்கந் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர். ஆசாரம் - நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டு. நற்குடிப் பிறப்பு - நல்ல குடியிற் பிறத்தல். ஆசாரமுடையவரே மேலாவர்; வருணத்தாலுயர்வு தாழ்வின்று, ஒழுக்கத்தால் உயர் விழிவு என்க. மேலும் ஒழுக்கமுடையவர் நோயடையாதவராய்ச் செல்வங் குன்றாதவராய்ச் சிறப்பர். பிறப்பு, வாழ்க்கை : தொழிற்பெயர்கள், செல்வம் : தொழிலாகுபெயர். வனப்பு : பண்புப்பெயர். மீக்கூற்றம் - மேலான சொல். கூற்றம் - கூறு என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர். மீ. மேல். பிறப்பு முதல் நோயின்மைவரை பெயர்ச் செவ்வெண் இச்செய்யுள் தனிச் சொலின்றிப் பல விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.
|