(க-ரை.) உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும், கசப்பான கறிகளை இறுதியிலும் ஒழிந்த சுவைக்கறிகளை இடையிலும் உண்க. ஆக, எல்லாம் என்னுஞ் சொற்கள் தித்திப்ப, கைப்ப என்பவற்றோடுங் கூட்டப்பட்டன. கைப்பன, திதிப்ப, ஒழிந்த : பலவின்பால் வினையாலணையும் பெயர்கள். துய்க்க : ககர வீற்று வியங்கோள், இச்செய்யுளின் முதலடி சீவகசிந்தாமணி பதுமையாரிலம்பகம் 136 ஆம் செய்யுளின் மூன்றாம் அடியாகிய "இன்மலர்த் தவிசினுச்சி யிருந்தமிர் தினிதிற் கொண்டான்" என்பதற்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. (25) உண்கலம்முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால் உண்பவற்று ளெல்லாஞ் சிறிய கடைப்பிடித் தன்பிற் றிரியாமை யாசார நீங்காமை பண்பினா னீக்கல் கலம். (இ-ள்.) முதியவரைப் பக்கத்து வையார் - (மூத்தார் தம் மோடுண்ணும்பொழுது) அம்முதியவரைத் தம் பக்கத்தில் வைத்துண்ணார். விதிமுறையால் - ஒழுங்குப்படி, உண்பவற்றுள் எல்லாம் - உண்ணும் கலங்களெல்லாவற்றுள்ளும், சிறிய - சிறியவற்றை, கடைப்பிடித்து - உறுதியாகக்கொண்டு, அன்பில் திரியாமை - அன்பின் மாறுபடாமலும். ஆசாரம் - ஒழுக்கம். நீங்காமை - தவறாமலும் (உண்டு), கலம் - உண்கலங்களை, பண்பினால் நீக்கல் - முறையால் நீக்கல் வேண்டும். (ப. பொ-ரை.) தம்மின் மூத்தார் உண்ணும்பொழுது, அம்மூத்தாரைத் தம் பக்கத்து வைத்து உண்ணார், முறைமையான் உண்ணுங்கலங்கள் எல்லாவற்றுள்ளும் சிறிய கலங்களைக் கடைப்பிடித்துத் தனக்குக் கைக்கொண்டு காதல் பிறழாத வகையும், ஒழுக்கத்தின் நீங்காத வகையும் உண்டு, வரைவோடு கூட உண்டமைந்தால் உள்ள கலங்களை முறைப்படி நீக்குக. (க-ரை.) தம்மின் முதியாரைத் தம் பக்கம் வைத்துண்ணாமலும் உண்கலங்களிற் சிறியவற்றைப்பற்றி அன்பும்ஒழுக்கமுங் குன்றாமலும் உண்டு பின் உண்கலங்களை நீக்குக. நீக்கல் : அல் ஈற்று வியங்கோள், தம்மின் : இன், எல்லைப் பொருள். உண்டு : சொல்லெச்சம். முதியவர் - முதுமை என்னும் பண்படியாகப் பிறந்த பெயர் : வயது முதிர்ந்தவர். (26)
|