வாய் துப்புரவு செய்வகை இழியாமை நன்குமிழ்ந் தெச்சி லறவாய் அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப் பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல் மிக்கவர் கண்ட நெறி. (இ-ள்.) இழியாமை - வாயிற் புக்க நீர் உள் புகாதபடி நன்கு உமிழ்ந்து - நன்றாய்க் கொப்புளித்து. எச்சில் அற - எச்சில் அறும்படி, வாய் அடியோடு - வாயையும் அடியையும், நன்கு துடைத்து - நன்றாகத் துடைத்து, வடிவு உடைத்தாக - அழகு உடையதாக, முக்கால் குடித்து - முக்குடி குடித்து, துடைத்து - துடைத்துக்கொண்டு, முகத்து - முகத்திலுள்ள, உறுப்பு - கண் முதலிய உறுப்புக்களை, ஒத்த வகையால் - அவற்றிற்குத் தக்க வகைகளால், விரல் உறுத்து - (மந்திரஞ்சொல்லி) விரல்களைச் செலுத்தி, வாய் பூசல் - வாய் துடைத்தல், மிக்கவர் கண்ட நெறி - பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாம். (ப. பொ-ரை.) வாயில் புக்க நீர் உட்புகாமை மிகவும் உமிழ்ந்து, எச்சில் அறும்படி வாயையும் அடியையும் மிகத் துடைத்து, அழகுடைத்தாக முக்காற் குடித்துத் துடைத்து, முகத்தின்கண் உள்ள உறுப்புக்களை அவற்றுக்குப் பொருந்தும் வகையால் விரல்களை உறுத்தி, அப்பெற்றியானே பூசும் பூச்சு நெறிமிக்கவர் கண்ட நெறி. (க-ரை.) உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து, எச்சிலறச் சுத்தி செய்து முக்கால் குடிக்க. முக்கால் குடித்தலாவது கடவுளின்பெயரைச் சொல்லிக், குடங்கையிட்டு உழுந்தமிழும் அளவுள்ள நீரை எடுத்து உட்கொள்ளுதல். இரண்டு கண்கள், இரண்டு செவிகள், மூக்கினிருபுறம் ஆகிய இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயரைச் சொல்லி ஒவ்வொரு விரலை யமைத்தல் விதியாதலின் ‘ஒத்தவகையால் விரலுறுத்தி' என்றார். உறுத்தி : பிறவினையெச்சம்; உறுத்து : பகுதி. முகத்து உறுப்பு என்பதற்கு முகத்திலுள்ள கண் முதலிய உறுப்புக்கள் என்பது முறை. உண்டபின் வாய் பூசும் பூச்சு இவ்வகைத்து என்பது அடியில் வரும் சீவகசிந்தாமணிப் பதுமையாரிலம்பகம் 137 ஆவது செய்யுளாலும் விளங்கும்.
|