"வாசநற் பொடியும் நீருங் காட்டிடத் தொண்டு வாய்ப்பப் பூசறுத் தங்கை நீரை மும்முறை குடித்து முக்காற் காசறத் துடைத்த பின்றைக் கைவிர லுறுத்துத் தீட்டித் தூசினா லங்கை நீவி யிருந்தனன் தோற்ற மிக்கான்." (27) நீர் பருகும் முறைஇருகையால் தண்ணீர் பருகா ரொருகையாற் கொள்ளார் கொடாஅர் குரவர்க் கிருகை சொறியா ருடம்பு மடுத்து. (இ-ள்.) இரு கையால் - இரண்டு கைகளாலும், தண்ணீர் பருகார் - தண்ணீர் குடியார்; ஒரு கையால் - (பெரியோர் கொடுக்கும் பொருளை) ஒரு கையினால், கொள்ளார் - வாங்கார், குரவர்க்கு - பெரியோர்க்கு, கொடார் - (ஒரு கையால்) கொடுக்கமாட்டார், உடம்பு - உடம்பில், இரு கை மடுத்து - இரண்டு கைகளையும் வைத்து, சொறியார் - சொறியமாட்டார். (ப. பொ-ரை.) இரு கையால் முகந்தும் ஏற்றும் தண்ணீர் குடியார், குரவர் கொடுப்பனவற்றை ஒரு கையால் வாங்கிக் கொள்ளார்; அவருக்குத் தாம் ஒரு கையால் கொடார், உடம்பினை மடுத்து இரு கையால் சொறியார். (க-ரை.) தண்ணீரை இரு கையாலுங் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும்பொழுதும் ஒன்றைக் கொடுக்கும்பொழுதும் இரு கையாலேயே வாங்கல் கொடுக்கல் செய்யவேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது. தண்ணீர் - தண் : இயற்கை யடைமொழி. கொடாஅர் வெண்பாத் தளைதட்டாமைக்கு வந்த அளபெடை. மடுத்து - அடைந்து, நெருக்கமாக. சொறிதல் - பிறாண்டுதல். (28) அந்திப்பொழுது செய்வன தவிர்வனஅந்திப் பொழுது கிடவார் நடவாரே உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி அல்குண் டடங்கல் வழி. (இ-ள்.) அந்திப்பொழுது - மாலைப்பொழுதில் கிடவார் - படுத்துத் தூங்கார், நடவார் - வழிநடந்து செல்லார், உண்ணார் - உண்ணமாட்டார், வெகுளார் - ஒருவரைச் சீறார், முன் அந்தி மாலையின் முற்பொழுது, விளக்கு இகழார் - விளக்கு இகழாமல்
|