ஏற்றுவர், அல்கு அந்தி - இரவில், உண்டு -, அடங்கல் - (புறம் போகாது ஓரிடத்திலே) அடங்குதல், வழி - நெறி, ஏ : அசை. (ப. பொ-ரை.) மாலைப்பொழுதின்கண் கிடத்தலும், வழி நடத்தலும் செய்யார்; ஒருவரைச் சீறுவதுஞ் செய்யார்; அந்திப் பொழுது விளக்கு இகழாது ஏற்றுவர்; மாலைப்பொழுதின்கண் உண்ணாது அல்கலின்கண் உண்டு, புறம்போகாது ஓரிடத்தின் கண்ணே அடங்குதல் நெறி. (க-ரை.) மாலைப்பொழுதில் படுத்தல் வழிநடத்தல் செய்யாதும், உண்ணாமலும் எவரையும் சீறாதும், விளக்ககேற்றி இரவானது முண்டு அடங்கியிருத்தல் முறை. முன்னந்தி : இலக்கணப்போலி. அந்திமுன் எனக் கொண்டு அந்தியில் என்றுங் கூறலாம். விளக்கு : தொழிலடியாகப் பிறந்த காரணப்பெயர். விளக்கிகழார் என்பதற்குத் தீபத்தைக் கண்ட போது பழிக்காமல் தொழவேண்டும். இது "திரியழற் காணிற்றொழுப" என்னும் நான்மணிக்கடிகை யடியாலும் வலியுறும். அல்கு அந்தி : ஆறாம் வேற்றுமைத்தொகை, சுருங்கிய பகலின் முடிவு, அஃதாவது பகலொடு இரவின்சேர்க்கை நாளந்தி, முந்திய நாளொடு பிந்திய நாளின் சேர்க்கை. ‘அந்திப்பொழுதிற்கிடவார்' என்றும் பாடம். (29) தூங்கும் முறைகிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி. (இ-ள்.) கிடக்குங்கால் - படுக்கும்பொழுது, தெய்வம் - கடவுளை, கைகூப்பித்தொழுது - கைகுவித்து வணங்கி, வடக்கொடு - வடதிசைக்கண்ணும், கோணம் - கோணத்திசையின் கண்ணும், தலைசெய்யார் - தலையை வைக்காமல், மீக்கோள் - மேலே போர்த்துக்கொள்ளும் போர்வையை, உடல்கொடுத்து - உடம்பிற்குக் கொடுத்து, சேர்தல் - படுக்கையிற் சேர்தல், வழி - ஒழுக்கமாம். (ப. பொ-ரை.) கிடக்கும்பொழுது தெய்வத்தைக் கைகூப்பித் தொழுது வடதிசையின்கண்ணும் கோணத்திசையின்கண்ணும் தலைவையாது, மேற்போர்ப்ப தொன்றினை உடம்பின் கண் கொடுத்துக் கிடத்தல் நெறி.
|