இருபுலனுஞ் சோரா இடம் புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தந் தேவ குலநிழ லானிலை வெண்பலியென் றீரைந்தின் கண்ணு முமிழ்வோ டிருபுலனுஞ் சோரா ருணர்வுடை யார். (இ-ள்.) உணர்வு உடையார் - அறிவுடையோர். புல் - புல்லின்கண்ணும், பைங்கூழ் - பயிருள்ள நிலத்தினும், ஆப்பி - பசுவின் சாணத்தின் மேலும். சுடலை - சுடுகாட்டிலும், வழி - வழியிலும், தீர்த்தம் - தீர்த்தமுள்ள இடத்திலும், தேவகுலம் - தேவாலயங்களிலும், நிழல் - நிழலுள்ளஇடத்திலும், ஆன் நிலை - பசுக்கள் நிற்குமிடத்திலும், வெண் பலி - சாம்பலிலும், என்ற ஈர் ஐந்தின்கண்ணும் - என்று சொல்லப்பட்ட இப் பத்திடங்களிலும். உமிழ்வோடு - எச்சிலுமிழ்தலையும். இரு புலனும் - மலசலங் கழித்தலையும், சோரார் - ஒழுக்கார். (ப. பொ-ரை.) புல்லின் கண்ணும், விளைநிலத்தின்கண்ணும் ஆப்பியின்கண்ணும், சுடலையின்கண்ணும், வழியின்கண்ணும், தீர்த்தத்தின்கண்ணும். தேவர் கோட்டத்தின்கண்ணும். நிழலின்கண்ணும்; ஆநிரை நிற்கும் இடத்தின்கண்ணும் சாம்பலின்கண்ணும் என ஈரைந்தின்கண்ணும் உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் சோரார் உணர்வுடையார். (க-ரை.) புல் முளைத்திருக்குமிடம் வயலிடம் முதலிய இடங்களை யுமிழ்ந்தும் மலசலங் கழித்தும் அசுத்தம் செய்தலாகாது. ஆ + பீ = ஆப்பி - "ஆமுன் பகரவீ யனைத்தும் வரக்குறுகும்" (நன். சூ. 177.) குலம் - மனை, வீடு. பைங்கூழ் - முன் பயிரை யுணர்த்தி அது தானி யாகுபெயராய்ப் பயிர் நிலத்தையுணர்த்தியது. தீர்த்தம் - தூய நீர் நிலை. சுடலை : தொழிலாகுபெயர். புலன் - அவற்றின் காரியத்திற்குக் கருவியாகுபெயர். (32) இருபுலன் கழிக்குந் திசைபகற்றெற்கு நோக்கா ரிராவடக்கு நோக்கார் பகற்பெய்யார் தீயினு ணீர். (இ-ள்.) பகல் - பகற்பொழுதில், தெற்கு நோக்கார் - தெற்கு நோக்காமலும், இரா - இரவில், வடக்கு நோக்கார் - வடக்கு நோக்காமலும் இருந்து மலசலங்கழிப்பார்; பகல் - பகற்பொழுது, தீயினுள் - தீயில், நீர் பெய்யார் - நீரூற்றி யவிக்கார்.
|