பக்கம் எண் :

30

(ப. பொ-ரை.) பகல் தெற்கு நோக்கியும் இராவடக்கு நோக்கியும் இருந்து மூத்திர புரீடங்களைச் சேரார், பகற் பொழுதின்கண் தீயினுள் நீர் பெய்யார்.

(க-ரை.) மலசலங் கழிப்பவர் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் இருந்து கழித்தலாகாது.

தீ - ஓமத்தீ, வேள்வித்தீ. சோர் - ஒழுக்கு.

(33)

இதுவுமது

பத்துத் திசையு மனத்தான் மறைத்தபின்
அந்தரத் தல்லா லுமிழ்வோ டிருபுலனும்
இந்திர தானம் பெறினு மிகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.

(இ-ள்.) தந்திரத்து - நூன்முறையால், வாழ்தும் என்பார் - ஒழுகுதும் என்பவர். பத்து திசையும் - பத்துத் திசையினையும், மனத்தால் மறைத்தபின் - மறைத்தாராக மனத்தினால் கருதி, அந்தரத்து அல்லால் - வேறோரிடத்தின்கண்ணே, சோர்கின்றாராகக் கருதியல்லது, உமிழ்வோடு - உமிழ் நீரையும், இரு புலனும் - மூத்திர புரீடங்களையும், இந்திரதானம் பெறினும் - இந்திர பதவியைப் பெறுவதா யிருப்பினும். இகழார் - சோரார்.

(ப. பொ-ரை.) திசை பத்தினையும் மறைத்தாராக மனத்தாற் கருதிப் பத்துத் திசையின்கண்ணும் அன்றியிலே வேறோரிடத்தின்கண்ணே சோர்கின்றாராகக் கருதியல்லது உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் இந்திர பதவியைப் பெறுவதாயிருப்பினும் சோரார் நூன்முறையான் ஒழுகுதும் என்பார்.

(க-ரை.) திசை பத்தையும் மறைத்ததாகப் பாவித்து அந்தரத்திற் செய்வதாக நினைத்து எச்சி லுமிழ்தலும் மலசலங் கழித்தலும் செய்க.

பத்துத் திசை - நாற்றிசை, கோணத்திசை நான்கு ஆகிய எட்டுடன், மேல் கீழ் ஆகி இரண்டும் சேர்ந்த பத்துத் திசை. அந்தரம் - ஆகாயம். தானம் - இடம், பதம். பெறினும் : உம் உயர்வு சிறப்பு. வாழ்தும் : தும் விகுதிபெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று.

(34)