பக்கம் எண் :

31
வாய்பூசலாகா இடங்கள்

நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினாற்
பெய்பூச்சுச் சீரா தெனின்.

(இ-ள்.) நீரகத்து நின்று - நீரிடத்துநின்றது, நடைவரவு நின்று - நடவாநின்றும், வாய் பூசார் - வாயலம்பார். வழி - வழியில், நிலை நீர் உள்ளும் - தேங்கியிருக்கும் நீரிலும், பூசார் - வாயலம்பார். மனத்தால் - மனதினால், வரைந்துகொண்டு அல்லது - வரையறுத்துக்கொண்டல்லாமல், பூசார் - வாயலம்பார், கலத்தினால் - கலத்தால் முகந்து, பெய் பூச்சு - சிலர் பெய்யப் பூச, சீராதெனின் - முடியாதாயின்.

(ப. பொ-ரை.) நீரகத்தின் கண்ணின்றும் நடவாநின்றும் தம் வாயைப் பூசார், ஓடுநீர் பெற்றிலராயின் நிலை நீருள்ளும் அப்பெற்றி பூசார். அந்நீர் அருந்தும்போது பூசும்போதும் மனத்தான் வரையறுத்துக்கொண்டல்லது பூசார், அதுவுஞ் செய்வது கலத்தான் முகந்து சிலர் பெய்யப் பூச முடியாதாயின்.

(க-ரை.) தண்ணீரில் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் வாயலம்பாது ஒரு கலத்தில் மொண்டே வாயலம்ப வேண்டும்.

நடைவரவு நீரகத்து நின்றும் என்பதை நடைநின்றும் வரவு நீரகத்து நின்றும் என்று பிரித்து, நடவாநின்றும் ஓடுகின்ற நீரில் நின்றும் என்றும் பொருள் கூறலாம். நீரகத்து - நீர் + அகம் + அத்து; அகம் : ஏழனுருபு, அத்து : சாரியை நிலைநீர் : இரண்டனுருபும் பயனும் உடன்தொக்கதொகை. பெய்பூச்சு - பெய்யப்பூசுதல், பெய் : பெய்ய என்பதன் விகாரம், பூச்சு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். "பெய்பூச்சுத் தாரா தெனின்" என்றும் பாடம்.

(35)

காட்சியவர் நற்செயல்

சுடரிடைப் போகார் சுவர்மே லுமியார்
இடரெனினு மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினு மாடை வளியுரைப்பப் போகார்
பலரிடை யாடை யுதிராரே யென்றுங்
கடனறி காட்சி யவர்.