பக்கம் எண் :

32

(இ-ள்.) சுடர் இடை போகார் - விளக்குக்கும் ஒருவர்க்கும் நடுவூடறுத்துப்போகார், சுவர்மேல் - சுவரின்மேல், உமியார் - உமிழார், இடர் எனினும் - தமக்குக் குளிரான் இடர் வரினும், மாசுணி - பிறர் உடுத்த அழுக்கு உடையை, தம் கீழ் மேல் கொள்ளார் - தங்கீழ்ப்படுத்தும் மேற் போர்ப்பதும் செய்யார், படை வரினும் - படை வந்தாயினும், ஆடை வளி - தாம் உடுத்த ஆடையின் காற்று, உறைப்பப் போகார் - பிறர்மேல் படும்படி செல்லார், பலர் இடை ஆடை உதிரார் - பலர் நடுவினின்று உடையை உதறார். என்றும் - எஞ்ஞான்றும், கடன் அறி - கடப்பாட்டை அறிந்த, காட்சியவர் - அறிவுடையார்.

(ப. பொ-ரை.) ஒருவருக்கும் விளக்கிற்கும் நடுவூடறுத்துப் போகார், சுவரின்மேல் உமியார், தமக்குக் குளிரான் இடர் வரினும் பிறருடுத்த மாசுணியைத் தங்கீழ்ப்படுப்பதும் மேற் போர்ப்பதும் செய்துகொள்ளார், படை வந்ததாயினும் தாமுடுத்த ஆடைக் காற்றுப் பிறர்மேல் உறைப்பப் போகார்; பலர் நடுவண் நின்று உடையை உதறார்; எஞ்ஞான்றும் கடப்பாட்டை அறிந்த அறிவுடையார்,

(க-ரை.) விளக்குக்கும் ஒருவர்க்கு மூடே செல்லுதல், சுவரில் உமிழ்தல், பிறரழுக்குடை யணிதல், அடுத்தவர்மேல் தம் ஆடைக் காற்றுப்படச் செல்லுதல், பலரிடைத் தம் ஆடையை உதறுதல் ஆகியவற்றைச் செய்தலாகாது

மாசு + உணி - அழுக்கால் உண்ணப்பட்டது. "மாசுணி தங்கீழ்மேற் கொள்ளார்" என்றும் பாடம்.

(36)

நரகஞ் செல்லுத்துவன

பிறர்மனை கட்களவு சூது கொலையோ
டறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார் - திறனிலரென்
றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
செல்வழி யுய்த்திடுத லால்.

(இ-ள்.) திறன் இலர் என்று - நல்லொழுக்க மில்லாதவரென்று, எள்ளப்படுவதூஉம் அன்றி - இகழப்படுவது மல்லாமல், நிரயத்து - நரகத்துக்கு, செல் வழி - செல்லும் வழியில், உய்த்திடுதலால் - செலுத்துதலால், அறன் அறிந்தார் - ஒழுக்கம் அறிந்தவர். பிறர் மனை - பிறருடைய மனையாளை விரும்புவதும், கள் - கட்குடிப்பதும், களவு - களவு செய்வதும், சூது -