சூதாடுதலும், கொலையோடு - கொலை செய்தலும், இவ் ஐந்தும் - இவ்வைந்தையும், நோக்கார் - மனத்தாலும் நினையார். (ப. பொ-ரை.) பிறர் மனையாளும், கள்ளும், களவும், சூதும், கொலையும் என்றிவ்வைந்தினையும், அறனறிந்தார் செய்வோமென்று கருதார். கருதுவாராயின் திறப்பாடிலரென்று பலரால் இழக்கப் படுதலுமன்றியே, நரகத்தின்கண் செல்லும் நெறியில் இவை செலுத்துதலான். (க-ரை.) பிறர்மனை நயத்தல். கள்ளுண்ணல், களவு செய்தல், கொலைசெய்தல், சூதாடல் இவை இகழ்ச்சிக்கும் நரகத்துக்கும் காரணமாதலால் இவைகளை மனத்திலும் நினைத்தல் ஆகாது. மனை - மனைவி : இடவாகுபெயர். அறன், திறன் : அறம் திறம் என்பவற்றின் போலி. படுவதூஉம்; இன்னிசை யளபெடை. படுவது : தொழிற்பெயர். எள்ள - இகழ, எள் : பகுதி. ‘செல்வழி யுய்த்திடுதலான்' என்றும் பாடம். களவு : தொழிற்பெயர். கள் : பகுதி. மனத்தாற் கருதுதலும் பாவமாதலின் நோக்கார் என்பதற்கு நினையார் என்று பொருளுரைக்கப்பட்டது. (37) சிந்திக்க லாகாதவைபொய்குறளை வௌவ லழுக்கா றிவைநான்கும் ஐயந்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின் ஐயம் புகுவித் தருநிரயத் துய்த்திடுந் தெய்வமுஞ் செற்று விடும். (இ-ள்.) ஐயம் தீர் காட்சியார் - சந்தேகந் தீர்ந்த அறிவுடையவர், பொய் - பொய் பேசுதலும், குறளை - கோட்சொல்லுதலும், வௌவல் - பிறர் பொருளைக் கைக்கொள்ளுதலும், அழுக்காறு - பொறாமை கொள்ளுதலும். இவை நான்கும் - என இவை நான்கினையுனையும், சிந்தியார் - நினையார்; சிந்திப்பின் - நினைப்பாராயின், ஐயம் புகுவித்து - இம்மையில் பிச்சை யெடுக்கும்படி வறுமையடையச் செய்து, அரு நிரயத்து - மறுமையில் அருமையான நரகத்திலும், உய்த்திடும் - செலுத்திவிடும், தெய்வமும் செற்றுவிடும் - தெய்வமும் அழித்துவிடும்.
|