(ப. பொ-ரை.) பொய்யும் குறளையும் பிறர் பொருளை வௌவுதலும் பிறராக்கத்தின்கண் பொறாமையும் என இவை நான்கினையும் ஐயந்தீர்ந்த அறிவினையுடையார் நினையார்; நினைப்பாராயின் பிச்சை புகுவித்து நரகத்தின்கண்ணேயும் புகுவிக்கும் : தெய்வமும் கெடுத்துவிடும். (க-ரை.) பொய் குறளை பேசுதலும், பொறாமை யுறுதலும், பிறர் பொருள் வௌவுதலும் ஆகிய இவை வறுமையுறுவித்துத் தெய்வத்தின் கோபத்துக்கும் ஆளாக்கும். அழுக்காறு - அழுக்கறு : பகுதி, முதனிலை திரிந்த தொழிற்பெயர்; அழுக்கு - பொறாமை, எதிர்மறை யிலக்கணையாய் அழுக்கறாமையாகிய பொறாமைக்காயிற்று. குறளை - குறள் : பகுதி, சிறுமை, ஐயம் என்பது திரிபு, அறியாமை என்னும் அதன் இனத்தையும் குறித்தது. செற்று - செறு : பகுதி. (38) மனைப் பலியூட்டல்தமக்கென றுலையேற்றார் தம்பொருட்டூண்கொள்ளார் அடுக்களை யெச்சிற் படாஅர் மனைப்பலி ஊட்டினமை கண்டுண்ப ஊண். (இ-ள்.) தமக்கு என்று உலை ஏற்றார் - தமக்கென்று உலைவையார், தம்பொருட்டு - பிறருக்கு உழைப்பதற்காக அன்றித் தம் நலனுக்காக, ஊண் கொள்ளார் - உணவும் உட்கொள்ளார், அடுக்களை - அட்டிலின்கண், எச்சில் படார் - எச்சிற்படுத்தார். மனைப்பலி - மனையுறை தெய்வங்கட்குப் பலி, ஊட்டினமை கண்டு - ஊட்டியதை யறிந்த பின்னர், ஊண் உண்ப - தாமும் உண்பர். (ப. பொ-ரை.) தமக்கென் றுலை யேற்றார்; பிறருக்கு உழைப்பதற்காக அன்றித் தமக்காக உணவும் உட்கொள்ளார்; அட்டிலின்கண் எச்சிற்படுத்தார்; மனையுறை தெய்வங்கட்குப் பலியூட்டினமை அறிந்த பின்னைத் தாம் உண்பர். (க-ரை.) பெரியோர் தந்நலம் கருதிச் செயல் செய்யார். பொருட்டு : நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு. பலி - தெய்வங்கட்கு இடும் உணவு. (39) இளங்கிளைஞர் உணவுஉயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார் இறந்தின்னா செய்தக் கடைத்துங் குரவர் இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.
|