(க-ரை.) நடுப்பகலிலும் நள்ளிரவிலும் மாலையிலுங் காலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும், அமாவாசை பௌர்ணமியிலும் அட்டமியிலும் பிறந்த நாளிலும் கலவியாகாது. உச்சி - நடு, நண்பகல். பொழுது என்பது போழ்து என மருவியது. அந்தி - காலை மாலை. உவா - அமாவாசை பௌர்ணமி. அட்டமி - பௌர்ணமி, அமாவாசை இவற்றின் பின்வரும் எட்டாவது நாள். ஒட்டார் - பொருந்தார், இணங்கார், "பிறந்த நாள் இவ்வெட்டும்" என்றும் பாடம். (43) மணை முதலியவைநாழி மணைமேல் இரியார் மணைகவிழார் கோடி கடையுள் விரியார் கடைத்தலை ஓராது கட்டிற் படாஅர் அறியாதார் தந்தலைக்கண் நில்லா விடல். (இ-ள்.) நாழி - நாழியை, மணைமேல் - மணைமீது, இரியார் - இருத்தார், மணை - மணையை, கவிழார் - கவிழ்த்துவையார், கோடி - புத்தாடையை, கடையுள் - தலைக்கடையின்கண், விரியார் - பரப்பார், கடைத்தலை - பலரும் புகும் கடைத்தலைக்கண், ஓராது - ஆராயாமல், கட்டில் படார் - கட்டிலில் படுக்கமாட்டார்; அறியாதார் தம் தலைக்கண் - தம்மை அறியாதவரெதிரில், நில்லா விடல் - நிற்றலொழிக. (ப. பொ-ரை.) நாழியை மணைமேல் இருத்தார். மணையைக் கவிழ்த்து வையார், புத்தாடையைத் தலைக்கடையின்கண் விரியார், பலருங் புகுதுங் கடைத்தலைக்கண் ஆராயாது கட்டிற்படார்; தம்மை அறியாதவர் முன்பு நில்லாது விடுக. (க-ரை.) அளக்கும் படியை மணைமேல் வைத்தலும், மணையைக் கவிழ்த்து வைத்தலும், புத்தாடையைத் தலைக்கடையில் விரித்தலும், தலைக்கடையிற் கட்டிலிட்டுப் படுத்தலும் ஆகா. தம்மை யறியாதா ரெதிரில் நிற்காதிரு. நாழி : முகத்தலளவை யாகுபெயர். இரியார் : பிறவினை விகுதி குன்றி வந்தது; இரு : பகுதி. இ : சாரியை. நில்லாவிடல் - நில்லாமல் விடல். அறியாதார் தந்தலைக்கண் நில்லா விடல் என்பதற்கு அறியாதார் கடைக்கண் நில்லாது விடுக எனினுமாம். (44)
|