களையும், நிறைய - நிறையும்படி, மலர் அணிந்து - பூ அணிந்து, அடுப்பினுள் தீ பெய்க - அடுப்பினுள் தீ யுண்டாக்குக. (ப. பொ-ரை.) சிறு காலையே துயிலெழுந்து, இல்லத்துள்ள துராலைக் களைந்து, கருங்கலங்களைக் கழுவி, தம் மனை ஆப்பி நீராலே எங்குந் தெளித்து, நீர்ச்சாலையும் கரகத்தையும் நிறைய மலரணிந்து, இல்லத்துப் பொலியும்படி அடுப்பினுள் தீ யுண்டாக்குக; நல்ல செல்வத்தை யுறல் வேண்டுவோர். (க-ரை.) நல்ல செல்வத்தை யடைய வேண்டுவோர் வைகறையில் எழுந்து வீட்டை விளக்கிக் கலங்களைக் கழுவி வீடு முழுவதும் சாணநீர் தெளித்து, நீர்ச்சால், கரகங்களை மலரணிந்து, பின்பு அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும். காடு - செத்தை, கரகம் - கமண்டலம். மலரணிதல் - மங்கலக்குறி. மணத்துக்காக வெனின், மலர் பாதிரி சண்பகம் போன்ற பூக்கள். காலம் என்பது - காலை எனவந்தது. (46) ஓதற்குதவாத காலம்அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும் அப்பூமி காப்பார்க் குறுகண்ணு மிக்க நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார் இலங்குநூல் ஓதாத நாள். (இ-ள்.) அட்டமியும் - எட்டா நாளும், ஏனை - அது ஒழிந்த, உவாவும் - அமாவாசையும் பௌர்ணமியும், பதினான்கும் - பதினான்கா நாளும், அ பூமி - தாந் தங்கியுள்ள பூமியை, காப்பார்க்கு - காக்கு மரசர்க்கு, உறுகண்ணும் - துன்பம் வருங்காலமும், மிக்க - மிகுதியான, நிலம் துளக்கு - பூமியின் அதிர்ச்சியுள்ள நாளும், விண் அதிர்ப்பு - மேக முழக்கமுள்ள நாளும், வாலாமை - தாம் தூயரல்லாத நாளும் ஆகிய இந்நாள்களில் பார்ப்பார் - அந்தணர், இலங்கு நூல் - விளங்காநின்ற மறைநூலை, ஓதாத நாள் - படிக்கலாகாத நாட்களாம். (ப. பொ-ரை.) அட்டமி நாளும் உவாநாளும், பதினான்காநாளும், தாமுறையும் பூமி காக்கும் அரசர்க்கு உறுகண்ணுள்ள நாளும், தமக்குத் தூய்மை போதாத நாளும் என இந்நாட்கள் பார்ப்பார் வேதமோதாத நாட்கள்.
|