பக்கம் எண் :

42

யாகம் செய்யும் நாளின்கண்ணும் இகழாதே கொடையறஞ் செய்க; விருந்தினர்க்குஞ் சோறிடுக.

(க-ரை.) கலியாண நாள் முதலிய ஐவகை நாட்களிலும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குஞ் சோறிடுக.

தேவர் நாள் - தெய்வத்திற்குச் செய்யப்படும் திருவிழாநாள். பிதிர்கள் - இறந்துபோன பெரியோர் அல்லது படைப்புக்காலந்தொட்டு விளங்கும் ஒருவகைத் தேவர்.

(48)

குடிமை முதலியவற்றிற்குத் தக்க செயல்

உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்குங் கல்விக்கும் ஆண்மைக்குந் தத்தங்
குடிமைக்குந் தக்க செயல்.

(இ-ள்.) உடை - உடுத்தலும், நடை - நடத்தலும், சொற்சோர்வு - சொல் தவறுதலும், வைதல் - திட்டுதலும், இந்நான்கும் - ஆகிய இந்த நான்கும், தம் தம் - தங்கள் தங்களுடைய, நிலைமைக்கும் - பதவிக்கும், கல்விக்கும் - படிப்புக்கும், ஆண்மைக்கும் - ஆற்றலுக்கும், குடிமைக்கும் - குடிப்பிறப்புக்கும், தக்க - ஏற்ப அமையும், செயல் - செயல்களாம்.

(ப. பொ-ரை.) உடையும் நடையும் சொற்சோர்வும் வைதலும் என இந்நான்கும், தாம் அரசனால் சிறப்புப் பெற்றமைக்கும், தன் ஆண்மைக்கும், தம் கல்விக்கும், குடிப்பிறப்புக்கும் தக்கனவாக அமையும் செயல்களாம்.

(க-ரை.) உடை நடை முதலியவைகள் தத்தம் நிலைமை கல்வி முதலியவற்றுக்குத் தகுந்தபடி அமையும்.

சொற்சோர்வு - சொல்லினது சோர்வு; ஆறாம் வேற்றுமைத் தொகை; சொல் சோர்தல், அஃதாவது தவறுதல் : எழுவாய்த் தொடர். ஆண்மை : மை விகுதி தன்மைப்பொருள் குறித்தது. தக்க : வினையுரியாய் வந்தது. நிலைமை - தானம் அல்லது பதவி. ‘சொற் செலவு' என்றும் பாடம்.

(49)

கேள்வியுடையோர் செயல்

பழியா ரிழியார் பலருள் ளுறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை யெள்ளி இகழ்ந்துரையார் தள்ளியுந்
தாங்கருங் கேள்வி யவர்.