(இ-ள்.) தாங்க அரும் - பெறுதற்கு அரிய, கேள்வியவர் - நூற்கேள்வி யுடையவர், தள்ளியும் - தவறியும், பலருள் - பலர் நடுவிலிருந்து, பழியார் - ஒருவரைத் தூற்றார், இழியார் - இகழ்ந்து பேசார், உறங்கார் - படுத்துத் தூங்கார், இசையாத - தமக்குப் பொருந்தாத செயல்களை, நேர்ந்து - செய்கிறோம் என்று ஒப்புக்கொண்டு, கரவார் - பின்னர் அதைச் செய்யாது ஒளியார், இசைவு இன்றி - முறையில்லாமல், இல்லாரை - வறிய வரை, எள்ளி - ஏளனம் பண்ணி, இகழ்ந்துரையார் - இழிவாகப் பேசார். (ப. பொ-ரை.) பலர் நடுவண் இருந்து பிறரைப் பழித்துரையார், இழித்துரையார் பலர் நடுவண் உறங்கார், தமக்குச் செய்யப் பொருந்தாதவற்றைப் பிறர்க்குச் செய்கிறோமென்று உடன்பட்டுச் செய்யாதொழியார், தகுதியின்றி வறியாரை இகழ்ந்து முறைமை கடந்து உரையார், பிறரால் வெல்லுதற்கரிய கேள்வியார் தவறியும். (க-ரை.) கல்வி கேள்வியுடையர் பலர் நடுவிலிருந்து பழித்திழித்துப் பேசார், உறங்கார், ஒன்றைச் செய்வதாக ஒப்பிப் பின் செய்யாதிரார், ஏழைகளை யிகழ்ந்துரையார். "செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார் நயத்தகு நாகரிக மென்னாம்" என்பதன் கருத்துணர்க. பலருள் : இடைகழி விளக்காய் நின்றது. இது தாப்பிசைப் பொருள்கோள். இசையாத : பலவின்பால் வினையாலணையும் பெயர். தாங்கரும் - மாறுபட்டு வெல்லுதற்கரிய எனவுமாம். (50) தம்மொளி வேண்டுவோர் செய்யத்தக்கனமின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமுந் தம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன் முன்னொளியும் பின்னொளியு மற்று. (இ-ள்.) தம் ஒளி வேண்டுவார் - தம் கண்ணின் ஒளியும், புகழும் கெடாமல் இருக்க விரும்புவோர், மின் ஒளியும் - மின்னலின் ஒளியையும், வீழ் மீனும் - விழுகின்ற எரிநட்சத்திரத்தையும், வேசையர்கள் - வேசியரது, கோலமும் - ஒப்பனையையும், நோக்கார் - பாரார், பகல் கிழவோன் - பகலுக்குரியோனான
|