(இ-ள்.) வைகறை - விடியற்காலமாகிய, யாமம் - பின் சாமத்திலே, துயில் எழுந்து - தூக்கத்தினின்று விழித்தெழுந்து, தான் செய்யும் - தான் மறுநாள் செய்யவேண்டிய, நல் அறமும் - நல்ல அறச்செயல்களையும், ஒள் பொருளும் - ஒள்ளிய பொருளுக்கு வருவாயான செயல்களையும், சிந்தித்து - ஆராய்ந்து பார்த்து, வாய்வதில் - வாய்ப்புடைத்தாவதோடு, தந்தையும் - தகப்பனையும், தாயும் - தாயையும். தொழுது எழுக - தொழுது எழுந்து ஒரு செயலைச் செய்க, என்பதே - என்று சொல்லப்படுவதே, முந்தையோர் - அறிவுடைய பழமையோர், கண்ட - செய்து வைத்திருக்கிற, முறை - முறையாம். (ப. பொ-ரை.) வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை. (க-ரை.) மறுநாட் செய்யப்புகுங் காரியத்தை வைகறையிலெழுந்து சிந்தித்துப் பின் பெற்றோரை வணங்கி அச்செயலைத் தொடங்குக. வைகறை - வைகுறு, மாலை யாமமும் இடை யாமமுங் கழிந்து அக் கங்குல் வைகுறுதல். அது கங்குல் வைகிய அறுதியாதல் நோக்கி வைகறையுமாம். விடியுமுன் பத்துநாழிகையளவு காலம் இது. பண்டையோர் ஒரு நாளை மாலை, யாமம், வைகுறு, எற்பாடு, விடியல், நண்பகல் என அறுபொழுதாகப் பகுத்துள்ளார். யாமம் - ஏழரை நாழிகை; அஃதாவது மூன்று மணிக்காலம். இதனையே "வைகறை யாமம்" என்றார். முந்தை - முந்து : பகுதி, ஐ : சாரியை, ஒண் பொருள் - அறத்தாற் செய்யப்படும் பொருள். வாய்வது - உண்மை, வாய்வதில் - உண்மையில், பழுதின்றி. பொழிப்புரைக்கிணங்க வாய்வதில் என்பதற்குப் பின்னைக் கங்குல் புலர்ந்தால் என்ற பொருளும் உரைக்கப்படும், இதுவும் பல விகற்ப இன்னிசை வெண்பா. இவ்வெண்பாவின் அடிகள் மதுரைக்காஞ்சி யுரையிலும், பிரயோக விவேக உரையிலும் எடுத்தாளப்பட்டுள்ளன. ‘சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே' என்றபடி தந்தையே ஒருவன் ஏற்றத்துக்குக் காரணமாதல் கருதி ‘தந்தை தாய்ப்பேண்' என்ற முறைக்கு இயையவே ‘தந்தையுந் தாயும்' என்றார். (4)
|