பக்கம் எண் :

44

ஞாயிற்றினது, முன் ஒளியும் - காலை யொளியும், பின் ஒளியும் - மாலை யொளியும், அற்று - அங்ஙனமே பார்க்கத் தகாதனவாம்.

(ப. பொ-ரை.) மின்னொளியையும், வீழ்மீனையும், வேசையர்கள் கோலத்தையும் தமது விளக்கத்தை வேண்டுவார் நோக்கார், பகற்கிழவோனுடைய காலை யொளியையும் மாலை யொளியையும் அப்பெற்றியே நோக்கார்.

(க-ரை.) தம் கண்ணின் ஒளியும், புகழும் கெடாதிருக்க வேண்டுவோர் மின்னல் எரிமீன் வேசையரின்கோலம் காலை மாலை வெயில் இவைகளை யுற்றுப் பார்த்தல் கூடாது.

கிழமை - உரிமை; உரியவன் - கிழவன். கிழவன் - செய்யுளில் கிழவோன் என ஆயிற்று. அற்று : குறிப்புமுற்று, ஒளி - விளக்கம், புகழ். ஒளி - வெயில்.

(51)

அசையாத உள்ளத்தவ ரொழுக்கம்

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத் தவர்.

(இ-ள்.)என்றும் - எக்காலத்தும், அசையாத - ஒழுக்கத்தினின்றுந் தவறாத, உள்ளத்தவர் - மனமுடையோர், படிறும் - வஞ்சனைச் சொல்லையும், பயனிலவும் - பயனற்ற சொல்லையும், பட்டி உரையும் - நாவடக்கமில்லாத சொல்லையும், வசையும் - பழிச்சொல்லையும், புறனும் - புறங்கூறுதலையும், உரையார் - சொல்லார்.

(ப. பொ-ரை.) வஞ்சனையுரையும், பயன்படாத உரையும், வாய் காவாது உரைக்கும் உரையும், பிறரைப் பழித்துரைக்கும் உரையும், இவை யாவும் சொல்லார், என்றுந் தளராத உள்ளத்தவர்.

(க-ரை.) வஞ்சனைமொழி பயனில் சொல் முதலியவற்றை ஒழித்தல் வேண்டும்.

பட்டி - கள்ளம், இங்கு நாவடக்க மின்மையைக் குறித்தது. புறங்கூறல் - முன் நின்று புகழ்ந்து பின்நின் றிகழ்ந்துரைத்தல். படிறு - வஞ்சனை : பண்பாகுபெயராய் வஞ்சனையாகிய சொல்லைக் குறித்தது. ‘பட்டியுரையாம் வசையும்' என்றும் பாடம்.

(52)