பக்கம் எண் :

46

சிறப்பு - செய்யுஞ் சிறப்புக்கள், முறுவல் - புன்சிரிப்புடன், இனிது உரை - இனிய மொழி பேசலும், கால் நீர் - கால் கழுவ நீர் அளித்தலும், மணை - உட்கார மணை கொடுத்தலும், பாய் - படுக்கப் பாய் கொடுத்தலும், கிடக்கையோடு - தங்க இடங் கொடுத்தலும், இ ஐந்தும் என்ப - இவ்வைந்தும் என்றார் அறிவுடையோர்.

(ப. பொ-ரை.) முறுவலோடு கூடிய இனிதுரையும், கால் கழுவ நீரும், இருக்க மணையும், கிடக்கப் பாயும், கிடக்கும் இடமும் என இவ்வைந்தும் என்று சொல்லுப, தம்மிடத்துச் சென்றார்க்கு உணவுடனே செய்யும் சிறப்புக்கள்.

(க-ரை.) தம் வீட்டுக்கு வரும் விருந்ததினர்க்கு உணவளித்தலுடன் இன்முகம் இன்சொல்லுடன், கானீர் முதலியன உதவியும் சிறப்பிக்க வேண்டும்.

கால் நீர் - பாத்யம்; கைகழுவு நீர் - அர்க்கியம். இவை சோடச உபசாரங்களிற் சில.

"விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே."

"தவிசுதாள் விளக்கப் புனல்தமக் கியன்ற
அடிசில்பூந் தண்மலர்ப் பாயல்
உவகையின் உறையும் இடனுகர் தெண்ணீர்
ஒண்சுடர் எண்ணெய்வெள் ளிலைகாய்
இவைகளொன் பதுந்தான் மனைவயின் அடைந்தோர்
மகிழ்வுற இனிதினில் அளித்தல்
நவையற இல்வாழ் வடைந்துளோன் பூண்ட
கடனென நான்மறை நவின்ற." - காசிகண்டம்."

(54)