அறிவினார் விரும்பாத இடங்கள் கறுத்த பகைமுனையுங் கள்ளாட்டுக் கண்ணும் நிறுத்த மனமில்லார் சேரி யகத்தும் குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும் நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு நீர்க்கரையும் நீடு நிலை. (இ-ள்.) நிகர் இல் அறிவினார் - ஒப்பற்ற அறிவுடையவர். கறுத்த - கோபித்த, பகை முனையும் - பகைக்கின்ற போர்முகத்திலும், கள் ஆட்டு கண்ணும் - கள் குடித்து ஆடுமிடத்திலும். நிறுத்த - நிலை நிறுத்திய, மனம் இல்லார் - மனமில்லாத வேசையருடைய, சேரி அகத்தும் - தெருவிலும், குணம் நோக்கி - குணங்களை யாராய்ந்து, கொண்டவர் - நட்புக்கொண்டவர். கோள் - கோட்பாட்டை, விட்ட உழியும் - நீக்கின விடத்திலும், பலர் தொகும் - பலர் ஒன்று கூடும், நீர் கரையும் - தண்ணீர்த் துறையிலும், நீடு நிலை - நெடிதாக நிற்கையை, வேண்டார் - விரும்பார். (ப. பொ-ரை.) வெகுண்ட பகை முனையின் கண்ணும், கள்ளால் களித்தாடுமிடத்தும், பொதுமகளிர் சேரிக்கண்ணும், குணங்களை யாராய்ந்து தம்மை விரும்பிக்கொண்டார் கோட்பாடு விட்டவிடத்தும், பலர் தொகும் நீர்க்கரையிடத்தும் நெடிதாக நிற்கையை ஒப்பில்லாத அறிவினையுடையார் விரும்பார். (க-ரை.) போர்க்களம், கட்குடித்தாடுமிடம், பரத்தையர் சேரி முதலிய இடங்களில் தங்கியிருப்பது சரியன்று. கறுத்த - கோபித்த ‘கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்பொருள' என்றதனால் அறிக. பகை : பண்பாகுபெயர். நிறுத்த : பிறவினைப்பெயரெச்சம். சேரி - இ : வினை முதற்பொருள் விகுதி; பல வீடுகள் சேர்ந்திருப்பது. நீடு நிலை : வினைத்தொகை. (55) தொல்வரவிற் றீர்ந்த தொழில்முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார் துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக் கானந் தமியர் இயங்கார் துளியஃகி நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே தொல்வரவின் தீர்ந்த தொழில்.
|