பக்கம் எண் :

49

காட்டிலும், ஊர் இல்வழி - ஊரில்லாத இடத்தில், எழுந்த - உண்டாகிய, ஒற்றை - ஒன்றாகிய, முது மரனும் - முற்றிய மரத்திடத்தும், தாமே தமியர் - ஒன்றியாக, புகாஅர் - போகார், பகல் - பகற்பொழுதில். கண் வளரார் - தூங்கார்.

(ப. பொ-ரை.) குடியில்லாத மனையகத்தும், தேவாலயங்களுக்குள்ளும் சுடுகாட்டுள்ளும், ஊரில்லாத இடத்து உளதாய தனி முதுமரத்தின்கண்ணும், அறிவின்றித் துணையோடல்லது தாமே போகார், பகலுறங்கார் நோயின்மை வேண்டுவோர்.

(க-ரை.) பாழ் வீடு, சுடுகாடு; தனித்த பாழ் மரம் இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில் தூங்காமலுமிருப்பது, நோயில்லாதிருப்பதற்கு ஏது.

இல்வழி : பண்புத்தொகை. ஒன்று - ஒற்றை : மென்றொடர் வன்றொடராய்த் தனிமொழியில் ஐகாரச் சாரியை வந்தது. தமியர் : குறிப்பு முற்றெச்சம். புகாஅர் : வெண்டளை பிழையாமைக்கு வந்த அளபெடை. முதுமரம் - ஆலமரமுமாம்.

(57)

பிறர் ஓரிடம் புறப்படுகையிற் செய்யலாகாதவை

எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ வென்னாரே முன்புக்
கெதிர்முகமா நின்று முரையா ரிருசார்வுங்
கொள்வர் குரவர் வலம்.

(இ-ள்.) எழுச்சிக்கண் - ஒருவர் எழுந்து போகும் பொழுது, பின் கூவார் - பின்னே நின்று அழையார், தும்மார் - தும்மல் செய்யார், வழுக்கியும் - மறந்தும், எங்கு உற்று சேறீர் - எவ்விடம் நோக்கிப் போகின்றீர், என்னார் - என்று கேளார், முன்புக்கு - அவர் முன் சென்று, எதிர்முகம் ஆநின்றும் - எதிர்முகமாக நின்றுகொண்டும், உரையார் - ஒன்றைச் சொல்லார், இரு சார்பும் - அவர்க்கு இருபுறத்திலும் (நின்று பேசுவர்), குரவர் - அப்பெரியாரை, வலம் கொள்வர் - வலஞ்செய்து போவர்.

(ப. பொ-ரை.) பிறர் எழுந்து போகத் தொடங்கின பொழுது அவரைப் பின்னே நின்று அழையார். அப்பொழுது தும்முவதுஞ் செய்யார். மறந்தும் எங்குப் போகிறீர் என்று சொல்லார். முன்னே புக்கு எதிர்முகமாக நின்றும் ஒன்றைச் சொல்லார். அவர்க்கு இருமருங்கும் நின்று சொல்வார். தம் குரவர் போம்பொழுது வலங்கொண்டு போவர்.