யார் - மேலோர், தம் ஒடு - தம்முடன், ஓர் ஆறு செல்லும் இடத்து - ஒரு வழியில் போகும்போது, யாது ஒன்றும் ஏறார் - எதன்மேலும் ஏறிச் செல்லார்; செருப்பு ஏறார் - செருப்பைக் காலிற் பூணார் - வெயில் மறையார் - வெயிலை மறைக்கும்படி குடை பிடித்துச் செல்வார், அங்கு : அசை. (ப. பொ-ரை.) யாதொன்றிலும் ஏறிப்போகார், செருப்புத்தொடார், தம்மேல் வெயில்மறைக்கக் குடை பிடித்துப் போகார் ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்முடன்கூட வழிபோமிடத்து. (க-ரை.) பெரியோருடன் செல்லும்பொழுது வாகனத்தில் ஏறியும் காலிற் செருப்பணிந்தும் குடை பிடித்தும் செல்லுதல் கூடா. ஆன்று : சான்று என்பதன் மரூஉ. சால் : பகுதி. அகன்று என்பதன் மரூஉ என்பாரு முண்டு. அவிந்த - தீக்குணங்கள் கெட்ட, அடங்கப்பெற்ற, ‘ஆன்றமைந்த' என்றும் பாடம். (60) நூன்முறையாளர் துணிவுவான்முறை யான்வந்த நான்மறை யாளரை மேன்முறைப் பால்தங் குரவரைப் போலொழுகல் நூன்முறை யாளர் துணிவு. (இ-ள்.) வால் முறையால் வந்த - தூய ஒழுக்கத்தால் வந்த, நால் மறை ஆளரை - நான்கு மறைகளையுமுடைய அந்தணரை, மேல் முறைப் பால் - மேன்மையாகிய முறைமையையுடைய, குரவரைப்போல் - தம்முடைய பெரியோரைப் போல ஒழுகல் - (எண்ணி) நடத்தல், நூல்முறை ஆளர் - நூல்முறை யுணர்ந்தவர்களுடைய, துணிவு - கொள்கை. (ப. பொ-ரை.) வாலிய முறையான் வந்த நான்மறையாளரை மேலாகிய முறைமையையுடைய தங்குரவரைப்போல் கொண்டொழுகுதல் நூல்முறையாளர் துணிவு. (க-ரை.) குலத்தாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த அந்தணரைத் தம்முடைய குரவர்போற் கொண்டு ஒழுக வேண்டும். மறை - மறைவான பொருள்களையுடையது. ஐ : வினைமுதற்பொருள் விகுதி. வான் முறை என்று கொண்டு மேலானமுறை என்று முரைக்கலாம் : பால் - தன்மை. (61)
|