குரவர்க்குச் செய்யும் ஒழுக்கம் கால்வாய்த் தொழுவு சமய மெழுந்திருப்பு ஆசார மென்பர் குரவர்க் கிவையிவை சாரத்தாற் சொல்லிய மூன்று. (இ-ள்.) கால்வாய் - காலின்கண், தொழுவு - தொழுதலும், சமயம் - அவர் நன்றென்ற சமயத்தின்கண் நிற்றலும், எழுந்திருப்பு - அவரைக் கண்ட வளவில் எழுந்திருத்தலும், இவை - ஆகிய இவை, குரவர்க்கு - பெரியோர்க்கு, ஆசாரம் என்பர் - செய்யும் ஒழுக்கம் என்று சொல்வர், சாரத்தால் சொல்லிய - சாரமாக எடுத்துச் சொல்லப்பட்டன. இவை மூன்று - இம்மூன்றுமேயாம். (ப. பொ-ரை.) காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்ற சமயத்தின்கண் நிற்றலும், அவரைக் கண்டால் எழுந்திருத்தலும் என இவை குரவர்க்குச் செய்யும் ஆசாரம் என்று சொல்லுவர் நல்லார்; குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் பல வற்றுள்ளும் சாரத்தாற் சொல்லப்பட்டவை இம் மூன்றுமேயாகும். (க-ரை.) குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் அவரைக் காலின்கண் வணங்குதல், அவர் கூறும் நெறியில் நிற்றல், கண்டவுடன் எழுந்திருத்தல் ஆகிய மூன்று. வாய் : ஏழனுருபு. சமயம் என்பதைக் கொள்கை, மதம் என்று கொண்டு குரவர் எது நன்றென்று கூறுவரோ அதனைக் கைக்கொண்டு நிற்றலும் ஆம். (62) திறங்கண்டார் கண்ட நெறிதுறந்தாரைப் பேணலும் நாணலுந்தாங் கற்ற மறந்துங் குரவர்முற் சொல்லாமை மூன்றுந் திறங்கண்டார் கண்ட நெறி. (இ-ள்.) துறந்தாரை - துறவிகளை, பேணலும் - போற்றுதலும், நாணலும் - பழிக்கு அஞ்சுதலும், தாம் கற்ற - தாம் கற்றவைகளை, குரவர் முன் - பெரியோர் முன்பு, மறந்தும் சொல்லாமை - மறந்துஞ் சொல்லாதிருத்தலும், மூன்றும் - ஆகிய மூன்றும், திறம் கண்டார் - தெளியக் கற்றவர்கள், கண்ட நெறி - அறிந்த ஒழுக்கம்.
|