(ப. பொ-ரை.) அருந்தவரைப் பாதுகாத்தலும், பழிநாணலும், தாங் கற்றவற்றைக் குரவர்முன் மறந்தாயினுஞ் சொல்லாமையும் என இம்மூன்றும் திறப்பட வறிந்தார் அறிந்தநெறி. (க-ரை.) அருந்தவரைப் பேணலும், பழி நாணலும், குரவர்முன் தாங் கற்ற திறத்தை யெடுத்துரையா திருத்தலும் சிறந்த வொழுக்கங்கள். பேண் - போற்று. நாணல் - பழிக்கஞ்சிப் பின்வாங்கல், அடங்குதலுமாம். பழி என்பது சொல்லெச்சம். கற்ற : பல வின்பால் வினையாலணையும் பெயர். திறம் - நூலின் சாரமுமாம். சொல்லாமை என்பதன் ஈற்றும்மை விகாரத்தால் தொக்கது. துறத்தல் - அகப்பற்று புறப்பற்று இரண்டையும் ஒழித்தல். (63) பிறப்பினுட் போற்றியெனப்படுவார்பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட் காற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப் போற்றி யெனப்படு வார். (இ-ள்.) பார்ப்பார் - அந்தணரும், தவரே - தவசியரும், சுமந்தார் - சுமையுடையவரும், பிணிப்பட்டார் - நோய் கொண்டவரும், மூத்தார் - பெரியோர்களும், இளையார் - பிள்ளைகளும், பசு - பசுக்களும், பெண்டிர் - பெண்களும், என்ற இவர்கட்கு - என்று சொல்லப்பட்ட இவர்களுக்கு, ஆற்ற - மிகவும், வழி விலங்கினாரே - வழிவிட்டுப் போனவர்களே, பிறப்பினுள் - மக்களாகப் பிறந்தவர்களுள் போற்றி எனப்படுவார் - பிறரால் வாழக்கடவர் என்று சொல்லப்படுவார். (ப. பொ-ரை.) பார்ப்பாரும், தவசியரும், சுமந்தாரும், பிணிப்பட்டாரும், மூத்தாரும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்டிரும் என்று சொல்லப்பட்ட இவர்க்கு மிகவும் வழி கொடுத்து விலகிப் போயினாரே மக்களாகப் பிறந்தவர்களுள் பிறராற் போற்றி யென்று சொல்லப்படுவார். (க-ரை.) பார்ப்பார் தவசியர் முதலியவர்களைக் கண்டால் வழிவிட்டுச் செல்வதே நெறி. இச்செய்யுள் இருதிணையும் கலந்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்ற திணைவழுவமைதி.
|