பார்ப்பார் சுமந்தார் முதலியவற்றில் எண் ஏகாரங்கள் தொக்கன. போற்றி - போற்றப்படுவது, போற்றப்படுபவர் எனப் பொருள் தரும். இ: செயப்படுபொருள் விகுதி. இனி, வியங்கோளாகவுங் கூறிப் போற்றுக என்பதுமாம். ‘பிறப்பிடை' என்றும் பாடம். (64) இன்னவருடன் தனித்திருக்க லாகாதெனல்ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனுந் தாங்கற் கரிதாக லான். (இ-ள்.) ஐம்புலனும் - ஐந்து புலன்களையும், தாங்கற்கு அரிது ஆகலான் - தடுத்தல் அரியதாதலால், சான்றார் - அறிவால் மிகுந்தோர், தம் - தம்முடைய, ஈன்றாள் - தாயுடனாயினும், மகள் - மகளுடனாயினும், உடன் பிறந்தாள் - உடன் பிறந்தவளுடனாயினும், தமித்து ஆக - தனிமையாக, உறையற்க - தங்காதிருக்கக்கடவர். (ப. பொ-ரை.) தாயுடனாயினும், மகளுடனாயினும், தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான். (க-ரை.) ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது. ஐம்புலன் சுவை யொளியூறோசை நாற்றம் என்பன. தமித்து : தமி என்னும் பகுதியடியாகப் பிறந்த குறிப்புமுற்று. இங்கு வினை யுரியாயிற்று. சான்றார் என்னும் பன்மையொடு தன் என்னும் ஒருமை பொருந்தாதாதலின் தம் என்பதனையே பாடமாகக் கொண்டு பொருள் கூறப்பட்டது. உறையற்க : எதிர்மறை வியங்கோள். "நற்றாய் புதல்வியுடன்றோன்றிய நங்கை யேனும், உற்றோருழியிற் றனியெய்தியுறைத லாகா" என்னும் காசிகண்டச் செய்யுளடிகள் இச்செய்யுட் பொருளை முற்றுங்கொண்டு சிறப்பது காண்க. "உரையற்க" என்ற பாடங்கொண்டு மேற்குறித்தவர்களுடன் தனித்திருந்து உரையாடாதிருக்க எனலுமாம். (65) அரசருடன் பழகுமளவுகடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார் கொடையளிக்கட் பொச்சாவார் கோலநேர்செய்யார்
|