இடையறுத்துப் போகிப் பிறனொருவற் சேரார் கடைபோக வாழ்துமென் பார். (இ-ள்.) கடை போக - இறுதியளவுஞ் செல்ல (வாழ் நாள் முழுவதும்), வாழ்தும் என்பார் - இடையூறு இன்றி வாழக்கடவோம் என்று கருதுவோர், கடை - அரசருடைய வாயிலில், விலக்கில் - தம்மைத் தடுத்தால், காயார் - வெகுளார், கழி - மிகுந்த, கிழமை செய்யார் - உரிமையை அவ்வரசர் பொறாதபடி செய்யார், கொடையளிக்கண் பொச்சாவார் - அரசனுக்குக் கொடுக்க வேண்டிய இறைப் பொருளை மறந்தும் கொடாமல் இரார், நேர் - அரசருக்கு ஒப்பாக, கோலம் செய்யார் - தம்மை அணி செய்து கொள்ளார், இடை அறுத்து போகி - வேந்தவையில் ஊடறுத்துச் சென்று, பிறன் ஒருவன் - மற்றொருவனை, சேரார் - சேர்ந்திரார். (ப. பொ-ரை.) அரசர் வாயிலின்கண் தடையுண்டானால் வெகுண்டு காயார், அரசரோடு மிகக்கிழமையை அவர்பொறாத வகை செய்யார், தமக்கு ஒன்று உதவுமிடத்தும், அவர்தம்மைத் தலையளிக்குமிடத்தும், தமக்கு அவை அமையா என்றிகழார், அரசரொக்கக் கோலஞ் செய்யார், அரசர் இருந்த அவையின் கண் ஊடறுத்துப் போகார், பிறனொருவனைச் சேர்ந்திரார்; முன்பு போலப் பின் கடை போக வாழ்தும் என்று கருதுவார். (க-ரை.) அரசருடன் பழகுவோர் அவரிடம் எந்த அளவில் நடந்துகொள்ளல் நலந்தருமோ அவ்வளவில் நடப்பதே முறை யென்க. கடை - கடைசியிடம்; வீடு முதலியவற்றின் கடைசியிடம். வாயில். இது முன்வாயில் பின்வாயில் எனப்படும். முன் வாயில் தலைக்கடை, பின் வாயில் புறக்கடை எனப்படும். கடை விலக்கில் : ஏழால் வேற்றுமைத்தொகை. பொச்சாவார் - தம் நிலையை மறந்து இகழார். கழி : உரிச்சொல். தலையளி - முக மலர்ந்தினிய கூறல். (66) சொல்லுமிடத்துக் குற்றமாவனதமக்குற்ற கட்டுரையுந் தம்மிற் பெரியார் உரைத்ததற் குற்ற உரையுமஃ தன்றிப் பிறர்க்குற்ற கட்டுரையுஞ் சொல்லற்க சொல்லின் வடுக்குற்ற மாகி விடும்.
|