பக்கம் எண் :

56

(இ-ள்.) தமக்கு உற்ற - தமக்குப் பொருந்திய, கட்டு உரையும் - உறுதி மொழியையும், தம்மில் பெரியார் - தம்மில் பெரியராக அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர்கள், உரைத்ததற்கு - சொல்லியதற்கு, உற்ற உரையும் - பொருந்திய சொல்லையும், அஃது அன்றி - அதுவன்றியும், பிறர்க்கு உற்ற - பிறர்க்குப் பொருந்திய, கட்டுரையும் - உறுதிச்சொல்லையும், சொல்லற்க - அரசனிடத்துச் சொல்லாதொழிக, சொல்லின் - சொன்னால், வடு - வசையுண்டாகத்தக்க, குற்றம் ஆகிவிடும் - குற்றமாய்விடும்.

(ப. பொ-ரை.) தமக்குற்ற கட்டுரைகளும், தம்மிற்பெரியராக அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டார் உரைத்த உரைகளும், அஃதன்றியே பிறர்க்குறுதியாகிய கட்டுரைகளும்; அரசர்க்குச் சொல்லற்க, சொல்லுவராயின் தமக்கு வடுப்படுங் குற்றமாம்.

(க-ரை.) அரசனிடத்தில் தமக்குப் பொருந்திய உறுதிச்சொல், அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டவர் உறுதி மொழி, பிறர்க்குறுதியாகிய கட்டுரை இவற்றைச் சொல்லுதல் பெருங்குற்றமாம்.

கட்டுரை - உயிர்க்கு உறுதிபயக்கும் மொழி, தம்மில் - இல் : ஐந்தனுருபு, எல்லைப்பொருள், வடு - தழும்பு : ‘நாவினாற் சுட்ட வடு' என்ற திருக்குறளடிக்குப் பொருள் விரித்த பரிமேலழகர் ஆறிப்போதலால் தீயினாற்சுட்டதனைப் புண்ணென்றும், ஆறாது கிடத்தலால் நாவினாற்சுட்டதனை வடுவென்றுங் கூறினார். தீயும் வெவ்வுரையுஞ்சுடுதற்றொழிலான் ஒக்குமாயினும், ஆறாமையாற் றீயினும் வெவ்வுரைகொடிது' என்று கூறியிருத்தல்காண்க.

(67)

நன்னெறி

பெரியார் உவப்பன தாமுவவார் இல்லஞ்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே யாயினு மிழித்துரையார் தம்மோ
டளவளா வில்லா விடத்து.

(இ-ள்.)பெரியார் - பெரியோர்கள், உவப்பன - விரும்புகின்றவற்றை, தாம் உவவார் - தாம் விரும்பார், இல்லம் - வீட்டினுள், சிறியாரைக் கொண்டு - கீழ்மக்களை அழைத்துக்கொண்டு, புகாஅர் - நுழையார், அறிவு அறியா - அறிவு இன்தென்றறியாத, பிள்ளையே ஆயினும் - சிறு பிள்ளையாயிருந்தாலும், தம் ஓடு - தம்முடன், அளவளாவு இல்லா இடத்து - நெருங்கிக் கலத்தல் இல்லாவிடின், இழித்து உரையார் - இழிவாகப்பேசார்.