(ப. பொ-ரை.) பெரியராயுள்ளார் உவந்தனவற்றைத் தாம் உவவார்; தம்மில்லத்தின்கண் கீழ்மக்களைக் கொண்டு புகார்; அறிவினையறியாத பிள்ளையேயாயினும், உயர்த்தன்றி இழித்துச் சொல்லார், தம்மோடு அளவளாவு இல்லாத விடத்து. (க-ரை.) பெரியார் உவந்தவற்றைத் தாம் விரும்புதலும், வீட்டுட் சிறியாரை யழைத்துச் செல்லுதலும் தம்மொடு பழக்கமில்லாதவர் சிறுவராயிருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறி. அளவளாவு : அளாவு - அளாவு என்பதன் மரூஉ, நன்றாகக் கலத்தல். இல்லம் - அம் : சாரியை. இல்லாவிடத்து - இடத்து : விகுதி. (68) அரசன் செயலில் வெறுப்படையாமை முதலியனமுனியார் துனியார் முகத்தெதிர் நில்லார் தனிமை யிடத்துக்கண் தங்கருமஞ் சொல்லார் இனியவை யாமறிது மென்னார் கசிவின்று காக்கைவெள் ளென்னும் எனின். (இ-ள்.) முனியார் - அரசன் செய்வனவற்றை வெறுக்கார், துனியார் - அவனொடு கலகங்கொள்ளார், முகத்து எதிர் நில்லார் - முகத்துக்கு எதிரில் நில்லார், தனிமை இடத்துக் கண் - அரசன் தனிமையாய் இருக்குமிடத்தில், தம் கருமம் சொல்லார் - தம்குறையைச் சொல்லார், இனியவை யாம் அறிதும் என்னார் - நன்மை தருவனவற்றை யாம் அறிவோம் என்று தாமாக முன்வந்து கூறார். காக்கை - காகம், வெள்ளென்னும் எனின் - வெண்ணிறமுடையது என்றாலும், கசிவு இன்று - அன்பின்றி வெகுளுமாறு மறுத்து உரையார். (ப. பொ-ரை.) அரசன் செய்வனவற்றை வெறார் அவனோடு கலாயார், விலங்கலின்றி நேர்முகத் தெதிர் நில்லார், அரசன் தனியே இருக்கும் இடத்தின்கண் தம் கருமம் சொல்லார், இனியவான பொருள்களை யாங்கள் நுகர்ந்தறிவோம் என்று அரசர்க்குச் சொல்லார், காக்கை வெள்ளென்றிருக்கு மென்ன அரசன் சொல்லினானாயினும் அவன்மேல் அன்பின்றி மறுத்துரையார். (க-ரை.) அரசன் செய்வனவற்றை வெறுத்தல், அவனோடு கலாய்த்தல், முகத்தெதிர் நிற்றல், தங்கருமங் கூறல் இனியவை யறிவே மென்றல் ஆகா.
|