@இன்றி என்பது செய்யுளில் இன்று என வந்தது, முனி - வெறு. கசிவு - கசிதல் : தொழிற்பெயர். (69) அரசர் முன்னர்ச் செய்யத்தகாதவைஉமிவும் உயர்ந்துழி யேறலும் பாக்கும் வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும் புணரார் பெரியா ரகத்து. (இ-ள்.) உமிவும் - எச்சில் உமிழ்தலும், உயர்ந்த உழி - உயர்வாகிய இடத்தில், ஏறலும் - எறியிருத்தலும், பாக்கும் - தாம்பூலம் போடுதலும், வகை இல் உரையும் - தகுதியில்லாததைச் சொல்லுதலும், வளர்ச்சியும் - தூங்குதலும், ஐந்தும் - ஆகிய இவ்வைந்தையும், பெரியார் அகத்து - அரசர் முன்பு, புணரார் - செய்யார். (ப. பொ-ரை.) உமிதலும், உயர்ந்தவிடத் தேறியிருத்தலும், பாக்குத் தின்னலும், கூறுபாடில்லாதவுரையும், உறங்குதலும், இவ்வைந்தும், அரசர் முன்பு செய்யார். (க-ரை.) அரசர் முன்னிலையில் உமிழ்தல் வெற்றிலை தின்னல் முதலிய செய்கைகளைச் செய்தலாகாது. பாக்கு - உபலக்கணமாக வெற்றிலை சுண்ணாம்புகளாகிய தன்னினத்தையும் உணர்த்திற்று. வளர்ச்சி - வளர்தல்; ஈண்டுக் கண்வளர்தல், தூங்குதல். உயர்ந்த உழி என்பது புணருமிடத்து நிலைமொழியீற்று அகரந்தொக்கது. பெரியார் - ஆற்றலாற் பெரியார், தவத்தாற் பெரியார் என்றிருவகையார்; அவர்களுள் இங்கு ஆற்றலாற் பெரியராகிய அரசர் குறிக்கப்படுகிறார். (70) அரசர்முன் பல்காற் பயின் றுரையாதனஇறைவர்முன் செல்வமுங் கல்வியுங் தேசுங் குணனுங் குலமுடையார் கூறார் பகைவர்போற் பாரித்துப் பல்காற் பயின்று. (இ-ள்.) குலம் உடையார் - நற்குடிப்பிறப்புடையார், செல்வமும் - செல்வத்தையும், கல்வியும் - கல்வியையும், தேசும் - விளக்கத்தையும், குணனும் - குணங்களையும், இறைவர் முன் - அரசர் முன்பு, பலகால் - பலமுறை, பயின்று - படித்து, பகைவர் போல் - பகைவரைப்போல, பாரித்து - பரப்பி, கூறார் - சொல்லார்.
|