(ப. பொ-ரை.) அரசர் முன்புதம் செல்வமும், கல்வியும், தமது விளக்கமும், குணனும் குடிப்பிறந்தார் தமக்குத் துன்பஞ் செய்யும் பகைவர்போல் பரப்பிப் பல்கால் பயின்றுரையார். (க-ரை.) ஒருவர் தங் கல்வி, செல்வம், குணம் முதலியவற்றை அரசர் முன்ன ரெடுத்துரைத்து அதனால் கெடுதியடையாதிருக்க வேண்டும். பகைவர்போற் கூறார் என்றதற்கு அங்ஙனங் கூறுதலால் தமக்குத்தாமே பகைவராவர் என்றாவது அல்லது அவ்வாறு கூறுதலைத் தமக்குப் பகைவர்போல் எண்ணிக் கூறாதொழிக என்றாவது கொள்க. தற்புகழ்ச்சி கூடாதென்க. அரசன் இறைவன் (கடவுள்) அமிசனாயிருந்து உலகங் காத்தலால் இறைவன் எனப்பட்டான். தேசாவது விளக்கம் : அஃதாவது தான் தன்னிடத்திருக்கவும், தனது ஆணை எங்குஞ் செல்வதற்கும், தன்னிடத்து யாவரும் மேன்மை பாராட்டுதற்குங் காரணமான தெய்வீக தன்மை. பாரித்தல் - பெருக்கிக் கூறுதல். (71) அரண்மனை ஆலயம் முதலிய இடங்களிற் பெரியாரை வணங்காதிருத்தல்பெரியார் மனையகத்துந் தேவ குலத்தும் வணங்கார் குரவரையுங் கண்டால் அணங்கொடு நேர்பெரியார் செல்லு மிடத்து. (இ-ள்.) பெரியார் மனை அகத்தும் - அரசர் மாளிகையிலும், தேவ குலத்தும் - தேவாலயங்களிலும், குரவரையும் - பெரியாரையும், கண்டால் -, வணங்கார் - தொழார், அணங்கொடு - தெய்வங்களும், நேர் பெரியார் - அத்தெய்வங்களை யொத்த அரசர்களும், செல்லும் இடத்து - வெளியிற் செல்லுமிடத்தும் (கண்டாலும் வணங்கார்.) (ப. பொ-ரை.) அரசர் மனையகத்தும் தேவாலயங்களுள் குரவரையுங் கண்டால் வணங்கார், தெய்வங்கள் புறம் போந்தெழுந்தருளு மிடத்தும், அரசர் புறம் போதுமிடத்தும் கண்டாலும் வணங்கார். (க-ரை.) அரண்மனை, ஆலயம், தெய்வவிழாக் காலம் அரசர் ஊர்வலம் வருங்காலம் இவற்றில் பெரியரைக் கண்டால் வணங்கா தொழிக. செல்லுமிடத்தும் என்ற உம்மை தொக்கது, குரவரையும் : உம் : உயர்வு சிறப்பு, அணங்கு - நோய், அழகு, தெய்வம்
|