எனப்படும். நேர் செல்லுமிடத்து எனக் கூட்டி ஊர்வலஞ் செல்லுமிடத்து எனவுங் கொள்க. (72) பெரியார்முன் செய்யின் பழியாவனநகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல் இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின் அசையாது நிற்கும் பழி. (இ-ள்.) நகையொடு - கிரிப்பும், கொட்டாவி - கொட்டாவி விடுதலும், காறிப்பு - காறியுமிழ்தலும், தும்மல் - தும்முதலும், இவையும் - ஆகிய இவற்றையும், பெரியார்முன் - அரசர் முன்பு, செய்யார் -, செய்யின் - செய்தால், பழி நிற்கும் - பழி நிலைக்கும், அசையாது - குறையாது. (ப. பொ-ரை.) சிரிப்பும் கொட்டாவியும் காறியுமிழ்தலும் தும்மலும் என, இவையும் அரசர் முன்பு செய்யார், செய்வாராயின், பழி குறையாது நிற்கும். (க-ரை.) அரசர் எதிரில் சிரித்தல் கொட்டாவி விடுதல் முதலியவற்றைச் செய்யற்க, செய்தாற் பழியே உண்டாகும். கொட்டு ஆவி : வினைத்தொகை. கொட்டுதல் - விடுதல், இதனை ஆவிகொட்டு என்பதன் இலக்கணப் போலியுமாமென்பர். பழி அசையாது நிற்கும் - பழிமாறாது நிலைக்கும் எனக் கருதி என்க. காறிப்பு : காறு என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர். (73) நன்மாணாக்கர் செய்கைநின்றக்கால் நிற்க அடக்கத்தா லென்றும் இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார் சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும் வினாவற்க சொல்லொழிந்தக் கால். (இ-ள்.) பெருந்தக்கார் - சிறந்த குணமுள்ள மாணாக்கர் என்றும் - எப்பொழுதும், அடக்கத்தால் - (ஆசிரியர் முன்பு) அடங்கியிருத்தல் வேண்டுதலின், நின்றக்கால் - ஆசிரியர் பாடஞ் சொல்லாதிருந்தால், நிற்க - தாம் சும்மா இருக்கக் கடவர், இருந்தக்கால் - அவர் தம் முன்பு இருந்தபோது, ஏவாமை - அவர் கட்டளையிடாமலிருக்க, ஏகார் - தாம் எழுந்து போகாதிருக்கக் கடவர், சொல்லின் - அவர் பாடம் முதலியவை சொல்லின்,
|