பக்கம் எண் :

61

செவிகொடுத்து கேட்டு - காது கொடுத்துக் கேட்டு, ஈக ஒப்புவிக்கக்கடவர்; சொல் ஒழிதக்கால் அவர் ஒன்றுஞ் சொல்லாவிட்டால், மீட்டும் - தாம் மீளவும், வினாவற்க - அவரைக் கேளாதிருக்கக் கடவர்.

(ப. பொ-ரை.) நன்மாணாக்கர் என்றும் ஆசிரியர் முன் அடங்கி யொழுகவேண்டுதலின், அவர் பாடஞ் சொல்லுதலை நிறுத்தினால் தாமும் நிற்கக்கடவர், அவர்முன் இருந்தபோது அவர் ‘எழுந்து போ' என ஏவுதற்குமுன் எழுந்து போகார். அவர் பாடம் முதலியவற்றைச் சொல்லின் செவிதாழ்த்துக் கேட்க, அவர் யாதொன்றும் சொல்லாவிடின் வினவாதிருக்கக் கடவர்.

(க-ரை.) நன்மாணாக்கர் ஆசிரியர் இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் போவெனப் போய், செவி வாயாகக் கேட்டவை விடாதுளத்தமைக்க முயல்வர்.

நின்றக்கால் ஒழிந்தக்கால் இருந்தக்கால் - என்பன எதிர்கால வினையெச்சங்கள். பெருந்தக்கார் - பெருமையாகிய தகுதியுடையார்.

(74)

பெரியாரவையிற் செய்யத்தகாதன

உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லுங்
கொள்ளார் பெரியா ரகத்து.

(இ-ள்.) பெரியார் அகத்து - பெரியோர் கூடியுள்ள அவையில், உடுக்கை - உடையை, இகவார் - அவிழ்க்கார், செவி சொறுண்டார் - காதைச் சொறியார், கைமேல் எடுத்து உரையார் - கையை உயரத் தூக்கிப் பேசார், பெண்டிர்மேல் நோக்கார் - பெண்களைப் பாரார். செவி சொல்லும் - (பிறர்) காதிற் சொல்லும் மறைமொழியையும், கொள்ளார் - தாம் கேளார்.

(ப. பொ-ரை.) பெரியாரவைக்களத்தில் ஆடையைக் களையார், காதைச் சொறியார், கைமேலெடுத்துப் பேசார். மாதர்களை நோக்கார், பிறர் செவியிற் சொல்லுஞ் சொல்லையுங் கேளார்.

(க-ரை.) பெரியோர் அவையிற் காதைச் சொறிதல், ஆடையைக் களைதல், கையுயர்த்திப் பேசுதல் முதலியன செய்யலாகாதன.