பக்கம் எண் :

62

உடுக்கை : தொழிலாகுபெயர். பெண்டிர்மேல் : வேற்றுமை மயக்கம், ‘செவிச்சொல்லுங் கேளார்,' ‘செவி சுறண்டார்' என்றும் பாடபேதங்கள் உள.

75)

ஒருவரிடத்தில் ஒன்றைச் சொல்லு முறை

விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித் துரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தாற்
சொல்லுப செவ்வி யறிந்து.

(இ-ள்.)விரைந்து உரையார் - விரைவாகப் பேசார், மேல் மேல் உரையார் - அடிக்கடி பலதடவை பேசார், பொய்ஆய - பொய்யாகியவற்றை, பரந்து உரையார் - விரித்துச் சொல்லார், பாரித்து உரையார் - விரிவாக்கிச் சொல்லார், எனைத்தும் ஒருங்கு - எல்லாவற்றையும் ஒன்றாக, சில் எழுத்தின் - சிறிய சொற்றொடரால், பொருள் அடங்க - சொல்ல வேண்டிய பொருள்கள் அடங்கும்படி, காலத்தால் - காலத்துக்கு ஏற்றபடி செவ்வி அறிந்து - கேட்போர் சமயம் அறிந்து, சொல்லுப - சொல்லுவர்.

(ப. பொ-ரை.) கடுகியுரையார், மேன்மேலுரையார், பொய்யாய சொற்களைப் பரக்க உரையார், தாம் உரைக்கத்தக்க சொற்களைப் பரப்பியுரையார், கூறவேண்டிய எனைத்தினையும் ஒரு மிக்க சில்லெழுத்தினானே பொருள் விளங்கும் வகை காலத்தோடு படுத்திக் கேட்போர் செவ்வியறிந்து சொல்லுவர்.

(க-ரை.) ஒருவரிடத்தில் ஒன்றைச் சொல்லும்பொழுது விரைதல் மேல்மேலுரைத்தல் முதலிய செய்யாது, சில்லெழுத்திற் பொருளடங்கப் பேசுதல் வேண்டும்.

ஆய : இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர். சில + எழுத்து = சில்லெழுத்து "பல சில வெனுமிவை" என்ற சூத்திரத்துக்கியையப் புணர்ந்தது.

செவ்வி - தக்க காலம். எழுத்து : கருவியாகு பெயர். காலத்தால் : வேற்றுமை மயக்கம்.

"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்"

என்றார் செந்நாப்போதாரும்.

(76)