பக்கம் எண் :

64

நேர்ந்தால், பிறிது ஒன்றை - வேறொன்றை, தேர்வார்போல் - ஆராய்வார்போல, திரிந்து - முகம்மாறி, நிற்க - நிற்கக்கடவர்.

(ப. பொ-ரை.) பிறரோடுகூட இருந்து ஒன்றனை ஆராயார், அரசனைச் சாரநில்லார் : அரசன் பிறனொருவனுக்குச் சொல்லுஞ் சொல்லைத் தஞ்செவியில் ஓரார், அரசன் ஒன்றனை ஒருவனுக்குச் சொல்லும்பொழுது குறுகநின்றாரெனின், பிறிதொன்றனை ஆராய்வார்போல முகந்திரிந்து நிற்க.

(க-ரை.) அரசவையில் வேறொருவனிடமிருந்து ஒன்றையாராய்தல், அரசன் அருகினிற்றல், மறை கேட்டல் முதலியன செய்தல் ஆகா.

மந்திரம் - மறைவான பொருள். பிறிது : பிற என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்.

"செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து." - திருவள்ளுவர்.

(78)

திறப்பட்டார் முச்செயல்

துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும் - அன்பிற்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.

(இ-ள்.) துன்பத்துள் - துன்பம்வந்த காலத்தில், துன்புற்று வாழ்தலும் - அத்துன்பத்தில் அமைவுற்று வாழ்தலும், இன்பத்துள் - இன்பம் வந்த காலத்தில், இன்ப வகையான் - பிறர்க்கும் இன்பம் செய்யும் வகையால், ஒழுகலும் - இன்புற்றுநடத்தலும், அன்பின் - அன்பினின்றும், செறப்படார் - செறப்பட்டவருடைய, இல்லம்புகாமை - வீட்டில் நுழையாமையும், இம் மூன்றும் - ஆகிய இம் மூன்றும், திறப்பட்டார் கண்ணே ஒருவழிப்பட்ட பெரியோரிடத்தே, உள - உண்டு.

(ப. பொ-ரை.) துன்பக் காலத்தில் அத் துன்பத்துள் அமைவுற்று வாழ்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கு இன்பு செய்யும் வகையான் இன்புற்று நடத்தலும், அன்பினின்றும் வேறுபட்டாரில்லம் புகாமையுமாகிய இம்மூன்றும் ஒரு திறப்பட்டார்கண்ணே உளவாம்.