கோபித்து என்பதாயின், இல்லம் : இடவாகுபெயர், பேர் : பெயர் என்பதன் மரூஉ. (80) ஆன்றோர் செயலாகாதனபுழைக்கடைப்பு காரரசன் கோட்டி உரிமை இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத் தொழிற்குரியர் அல்லா தவர். (இ-ள்.) அ அத் தொழிற்கு - அந்த அந்தத் தொழிலுக்கு, உரியர் அல்லாதார் - உரிமையுடையவ ரல்லாதவராகிய, செவ்வியார் - நற்குணமுடையோர், புழை கடை - ஒருவர் வீட்டின் புழைக்கடை வாயால், புகார் - அவர் வீட்டில் நுழையார், அரசன் கோட்டி - அரசன் (கூத்து முதலியவற்றால் இன்புற்று) அவை கூடியிருக்குமிடமும், உரிமை - மனைவியரோ டிருக்குமிடமும், இவற்றுக்கண் - ஆகிய இவ்விடங்களில், நோக்கார் - போய்ப் பாரார். (ப. பொ-ரை.) பிறர் மனையின்கண் புழைக்கடை வாயிலால் புகார், அரசன் கோட்டி கொண்டு கூத்து முதலாயின இன்புறாநின்றவிடத்தும், உரிமை மகளிரோ டிருந்தவிடத்தும் செவ்வியராயுள்ளா ரென்றும் நோக்கார்; அந்தந்தத் தொழிற்குரிய ரல்லாதார். (க-ரை.) வேறொருவர் வீட்டில் புழைக்கடை வாயிலாற் போதலும், அரசன் களியாட்டிடத்தும் அந்தப்புரத்திடத்தும் செல்லுதலும் ஆன்றோர் செயலாகா. புழைக்கடை - துவாரத்தின் கடை, வீடுகளை இடையீடாக ஏற இடம் விட்டுக் கட்டுவது தமிழ்நாட்டு வழக்கம். இவ்விடையிடம் வீட்டுக்குப் புழைபோன்றது. அதன் கடை, புழைக்கடை; இஃது ஆகுபெயராய் வீட்டின் பின்புறத்துள்ள நிலத்தைக் குறிப்பதாயிற்று. கோட்டி - கூட்டம். உரிமை - பண்பாகுபெயராய் மனைவியை யுணர்த்திற்று. (81) மனைவி மனம் மாறுபடுதல்வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம் ஒள்ளியம் என்பார் இடங்கொள்ளார் தெள்ளி மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க் குவப்பன வேறாய் விடும்.
|