(இ-ள்.)ஒள்ளியம் என்பார் - அறிவுடையோம் என்று சொல்பவர், வண்ணம் மகளிர் இடத்தொடு - தம்மை அழகு செய்துகொள்ளும் விலைமகளிரில்லத்தை அடுத்துள்ள, தம் இடம் - தம்மிடத்தில், இடம் கொள்ளார் - தாம் வாழும் இல்லத்தை அமைத்துக் கொள்ளார், தெள்ளி - தெளிவுற்று, மிக கிழமை உண்டு எனினும் - (அவ்விடம் தமக்கு) மிகுந்த உரிமையுடையதாயினும், வேண்டா - விரும்பப்படுவனவல்ல, பெண்டிர்க்கு - மனைவியர்க்கு, உவப்பன - விருப்பத்தைத் தருவன, வேறு ஆய்விடும் - வேறு பல உளவாய்விடும். (ப. பொ-ரை.) அறிவுடையோர் என்று சொல்லப்படுவோர் கோலஞ்செய்யு மகளிரிடத்தோடு சேர்ந்த தம்மிடத்தை வாழ்க்கைக்குச் சிறந்த இடமாகக் கொள்ளார். தெளிவுற்று மிகுந்த உரிமையுளதாயினும் விரும்பப்படுவனவல்ல, தம் மனைவியர்க்கு விருப்பம் வேறுபடும் ஆதலால். (க-ரை.) பொது மகளிர் வீட்டினருகிற் குடியிருப்புக் கொள்ளின் மனைவியர் மனவிருப்பம் மாறுபடும். வண்ணம் - அழகு, ‘விலைமகட்கு அழகுதன் மேனி மினுக்குதல்' ஆதலின், தம்மை யழகு செய்யு மகளிர் விலைமகளிர் எனப்பட்டனர். ஒள்ளியம் : தன்மைப்பன்மை வினைமுற்று. வேண்டா : செயப்பாட்டுப் பொருளில் வந்தது. தெள்ளி : வினையெச்சம். (82) இறுதிவரை ஒருதன்மையான வாழ்வுடையார்நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார் உரையிடை யாய்ந்துரையார் ஊர்முனிவ செய்யார் அரசர் படையளவுஞ் சொல்லாரே யென்றுஞ் கடைபோக வாழ்துமென் பார். (இ-ள்.) என்றும் - எப்பொழுதும், கடை போக - இறுதியளவும் (ஒருதன்மையாகச்) செல்ல, வாழ்தும் என்பார் - வாழக் கடவோம் என்பார், நிரல்பட - வரிசைப்பட, செல்லார் - போகார், நிழல் மிதித்தும் - ஒருவருடைய நிழலை மிதித்தும், நில்லார் - நிற்கமாட்டார், உரை இடை - பேசும்பொழுது, ஆய்ந்து - (முன்னர் ஆராய்ந்தன்றி) ஆராய்ந்து, பேசார் -, ஊர் முனிவ - ஊரார் வெறுக்கத்தக்கவைகளை, செய்யார் -, அரசர் படை அளவும் - அரசர் படைத்தொகையையும், சொல்லார் - (பகைவர்க்குச்) சொல்லமாட்டார்.
|