மன்னரின் மேம்பட்ட செய்யாமை அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை இறப்பப் பெருகியக் கண்ணுந் - திறப்பட்டார் மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின் மன்னிய செல்வங் கெடும். (இ-ள்.) திறப்பட்டார் - அறிவுடையோர், இறப்பபெருகியக் கண்ணும் - தம்மிடத்துச் செல்வம் மிகப் பெருகினாலும், அறத்தொடு - அறச்செயல்களையும், கலியாணம் - கலியாணங்களையும், ஆள் வினை - செய்யும் முயற்சிகளையும், கூரை - வீட்டையும், மன்னரின் - அரசர் செய்வதிலும், மேம்பட - அதிகமாக, செய்யற்க - செய்யாதொழிக, செய்யின் - செய்வாராயின், மன்னிய - பொருந்திய, செல்வம் கெடும் - செல்வம் கெட்டுவிடும். (ப. பொ-ரை.) அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும். (க-ரை.) எத்தகைய செல்வரும் அறம் மணம் முயற்சி வீடு இவ்வகையில் அரசரினும் மேம்படச் செலவு செய்யலாகாது. ஆள்வினை : வினைத்தொகை. கூரை : சினையாகுபெயர். இறப்ப : உரிச்சொல். (85) பெரியோரை உண்டது கேளாமைஉண்டது கேளார் குரவரை மிக்காரைக் கண்டுழிக் கண்டால் மனந்திரியார் புல்லரையும் உண்டது கேளார் விடல். (இ-ள்.) மனம் திரியார் - மனம் வேறுபடாதவர், குரவரை மிக்காரை - ஐங்குரவரையும் சான்றோரையும், கண்டால் -, கண்டுழி - கண்டவிடத்து, (அவர்களை நோக்கி), உண்டது கேளார் - நீங்கள் உண்டது யாதென வினவார், (ஆதலால்), புல்லரையும் - கீழோரையும், உண்டது கேளார் விடல் - உண்டது யாதென்று வினவா தொழிக.
|