பக்கம் எண் :

71

(இ-ள்.) திறத்து - பெரியோருடைய ஒழுக்கத்தை, உள்ளி நினைந்து, வாழ்தும் என்பவர் - (அவரைப்போல) வாழக்கடவோம் என்று விரும்புவோர், உதவி பயன் - உதவியின் பயனை, உரையார் - தாமே எடுத்துச் சொல்லார். உண்டி - உணவை, பழியார் - இகழ்ந்துரையார், அறத்தொடு - அறச்செயலையும், தாம் நோற்ற நோன்பு - தாம் செய்த விரதத்தையும், வியவார் - தாமே புகழ்ந்துரையார்.

(ப. பொ-ரை.) தாமொருவருக்குச் செய்த நன்றியின் பயனைச் சொல்லார், தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்ந்துரையார், தாம் செய்த அறத்தையும் விரதத்தையும் புகழ்ந்துரையார், பெரியோருடைய ஒழுக்கத்தினை நினைத்து அவ்வாறு வாழ்துமென் றெண்ணுவோர்.

(க-ரை.) தாம் பிறர்க்குச் செய்த உதவியைத் தாமே பாராட்டுதலும், பிறர் இட்ட உணவை யிகழ்தலும், தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும்தகா.

"தான்புரி தவத்தைக் கொடையினைப் புகழின்
தழைவுறா தஃகும்." - காசிகண்டம்

உதவிப்பயன் - உதவியினது பயன் : ஆறாம் வேற்றுமைத் தொகை : உதவியினால் வரும் பயன் எனின், மூன்றாம் வேற்றுமை யுருபும் பயனும் உடன்தொக்கதொகை. நோற்ற : நோல்; பகுதி, உளி - உள்ளி என்பதன் தொகுத்தல்,

(88)

கிட்டாதவற்றை விரும்பாமை முதலியன

எய்தாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனமழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.

(இ-ள்.) எய்யாத - தமக்குக் கிடைத்தற் கரியவற்றை. வேண்டார் - விரும்பார், இகந்ததற்கு - கழிந்து போன பொருள் குறித்து, இரங்கார் - வருந்தார், கைவாரா வந்த - அகற்றற்கரியதாய்வந்த, இடுக்கண் - துன்பத்துக்கும், மனம் அழுங்கார் - மனம் கலங்கார். மெய்யாய - உண்மையான, காட்சியவர் - அறிவினை யுடையவர்,

(ப. பொ-ரை.) தமக்குக் கிடைத்தற் கரியவற்றை விரும்பார், தம்மால் இழக்கப்பட்டனவற்றிற்கு வருந்தார், அகற்றற்கரிய இடுக்கண் உற்றுழியும் அதற்கு மனங்கலங்கார், உண்மையான அறிவினை யுடையவர்.